மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 28 மே, 2010
கொத்மலைஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை
ஆகரகந்தைத் தோட்டத்துக்கு அருகிலுள்ள கொத்மலை ஓயா ஆற்றிலிருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்றினை லிந்துலை பொலிஸார் இன்று 28 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் மீட்டெடுத்துள்ளனர்.
சுமார் 27 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சடலத்தில் உள்ளாடை மாத்திரமே உள்ளதாகவும் சடலத்தின் முகத்தினை அடையாளம் காணக்கூடியதாகவுள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது இந்தச்சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் லிந்துலைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பைத்தொட்டிக்கு அருகில் உயிருடன் குழந்தை மீட்பு : மஸ்கெலியாவில் சம்பவம்
மஸ்கெலியா – நோட்டன் பிரதான பாதையில் லக்கம் பிரதேசத்திலுள்ள குப்பைத்தொட்டிக்கு அருகில் அநாதரவாகக் கிடந்த குழந்தை ஒன்றை உயிருடன் மீட்ட பொலிஸார் அந்தக் குழந்தையை மஸ்கெலியா மாவட்டவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
இன்று 28 ஆம் திகதி காலையில் லக்கம் குப்பைத்தொட்டி அருகில் குழந்தை ஒன்று அநாதரவாக கிடந்ததை கண்ட பிரதேச மக்கள் இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து உயிருடன் இருந்த இந்த பெண்குழந்தையை பொலிஸார் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
குழந்தையைப் பரிசோதித்த வைத்திய அதிகாரி குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் இந்தக்குழந்தை பிறந்து 24 மணிநேரத்துக்குள் இருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்தக்குழந்தையை மேலதிக சிகிச்சைக்காகவும் பராமரிப்புக்காகவும் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழன், 27 மே, 2010
சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப்பருவக்காலம் இன்றுடன் நிறைவு
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பூரணைத்தினத்துடன் ஆரம்பமாகிய சிவனொளிபாதமலைக்கான
யாத்திரைப்பருவக்காலம் இன்று 27 ஆம் திகதி வெசாக்பூரணைத்தினத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த யாத்திரைப்பருவக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு இன்று 27 ஆம் திகதி இரவு
சிவனொளிபாதமலையில் இடம் பெற்ற விசேடபூஜைகளைத்தொடர்ந்து சிவனொளிபாதமலையில்
பிரதிஷ்ட்டைச் செய்யப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் நாளை 28 ஆம்
திகதி அதிகாலை வேளையில் மலையடிவாரத்திலுள்ள பௌத்த மத்திய நிலையத்திற்குக்
கொண்டு வரப்பபடவுள்ளன.
இதனைத்தொடர்ந்து அங்கு இடம் பெறவுள்ள விசேட பூஜைகளைத்தொடர்ந்து நாளை மறுதினம்
29 ஆம் திகதி காலை வேளையில் சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய
ரதபவனி நல்லத்தண்ணி நகரில் ஆரம்பமாகி மவுசாகலை ,டபல்கட்டிங் ,லக்ஷபாண ,கலுகல
,கிதுல்கல ,யட்டியன்தொட்டை,அவிசாவளை ,இரத்தினபுரி வழியாக பெல்மதுளை
கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விஹாரைக்குச் செல்லவுள்ளது.
இதே வேளை இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப்பருவக்காலம் எதிர்வரும்
டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி பூரணைத்தினத்துடன் மீண்டும் ஆரம்பமாகவுள்ளமைக்
குறிப்பிடத்தக்கது.
குளவி தாக்கியதில் பெண்தொழிலாளர்கள் பாதிப்பு
பொகவந்தலாவை மத்தியப்பிரிவு தோட்டத்தில் இன்று 27 ஆம் திகதி கொழுந்து
பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைக் குளவிகள் தாக்கியதில் பாதிப்படைந்த நான்கு
பெண்தொழிலாளர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய பெண்தொழிலாளர்கள் சிறுபாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொகவந்தலாவைப்பிரதேசத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் குளவிகளின் பெருக்கம்
அதிகரித்துள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் இந்தக்குளவிகளின் தாக்குதலுக்கு அடிக்கடி
உள்ளாகி வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
புதன், 26 மே, 2010
தேசிய இளைஞர் கொடித்தினம்
இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 26 ஆவது வருட தேசிய இளைஞர் தினக்கொடி வாரம் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தக்கொடி வாரத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் தினக்கொடிகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இலங்கைத் தேசிய இளைஞர் சம்மேளனத்தின் உபதலைவர் பி.சந்திரமோகனுக்குத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் உத்தியோகப்பூர்வமாக இந்தக்கொடியினை இன்று அணிவித்தார். இவருடன் இணைந்து கொண்ட நுவரெலியா மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்களைப் படத்தில் காணலாம்.
சனி, 22 மே, 2010
ஊடகவியலாளர்கள் நடைமுறைப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றினை வெளிக்கொணர வேண்டும் : சட்டத்தரணி நிரோஸ் பண்டார
நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சட்டத்திட்டங்கள் அறிந்து கொண்டு பல்வேறு விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தக்கூடிய ஆளுமையுடவர்களாக ஊடகவியலாளரகள்; செயற்படவேண்டும் என்று சட்டத்தரணி நிரோஸ் பண்டார தெரிவி;தார்.
தேசிய ஜனநாயக நிறுவனத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக கண்டி கண்டியனாட்ஸ் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்புக்கான உரிமை பற்றி இடம் பெற்ற இந்தச்செயலமர்வில் சட்டத்தரணி நிரோஸ் பண்டார தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
மக்களின் நடைமுறைப்பிரச்சினை தெரிந்து அவற்றினை ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளிப்படுத்தி அந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும்.எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.இந்த யுத்தக்காலத்தில் பெரும்பாலான ஊடகங்கள் யுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கே முன்னுரிமை வழங்கின.ஆனால் தற்போது யுத்தம் முடிந்து விட்டது.தற்போது நாட்டு மக்களுக்குப்பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.அவற்றினை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் இன்று அரசிலமைப்பு மாற்றம் தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் தெளிவு பெற்று அவற்றினை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றம் கொண்டு வருவதால் பிரயோஜனமில்லை.தேர்தல் சட்டத்திட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்களித்த மக்களுக்கு நியாயமான முறையில் சேவை செய்யும் நிலைமை நாட்டில் ஏற்படவேண்டும்.
ஆகவே ஜனநாயக நாட்டின் மிகமுக்கிய பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தமது தொழில்வாண்மையை விருத்தி செய்துகொள்ளும் வகையில் நாட்டின் சட்டத்திட்டஙகள் அரசியலமைப்பு ஸ்தாபன விதிக்கோவைகள் போன்ற விடயங்களைப்பூரணமாக அறிந்து வைத்திருப்பதோடு தமது செய்திகளில் இவற்றை வெளிப்படுத்தும் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
புதன், 19 மே, 2010
ஞாயிறு, 16 மே, 2010
அக்கரப்பத்தனையில் தீ விபத்து 75 பேர் நிர்க்கதி நிலை
நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பியன் தோட்ட ஆட்லோ பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தொன்றில் 12 வீடுகளைக்கொண்ட லயன் குடியிருப்பொன்று எரிந்து சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. மின்சாரவொழுக்கினால் இந்தத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த விபத்தினால் எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்படவில்லை.எனினும் தொழிலாளர் குடும்பங்களின் உடைமைகளுக்குப்பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 75 பேர் தற்போது தோட்டத்தின் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் பி.ஜி.குமாரஸ்ரீ உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இந்தத் தீவிபத்துத்தொடர்பான விசாரணைகளில் அக்கரப்பத்தனைப்பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளி, 14 மே, 2010
பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகள் வீணடிக்கப்படுவதை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்புப்போராட்டம்
தம்மால் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்தினை உரிய வகையில் அரைத்து தமக்குரிய வருமானத்தினை உறுதிப்படுத்தாத தோட்ட நிருவாகத்திற்கெதிராக லெதண்டி ,காபெக்ஸ் ,மால்புரோ,புரோடக் ஆகிய தோட்டங்களைச்சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் நேற்று 14 ஆம் திகதி மாலை அட்டன் - நோர்வூட் பிரதான பாதையில் வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கூடி கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்தத்தோட்டங்களிலுள்ள இரண்டு தேயிலைத்தொழிற்சாலைகள் கடந்த பல வருடங்களாக மூடப்பட்டுள்ளதால் இந்தத்தோட்டங்களில் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகளை அரைப்பதற்காக வனராஜா ,நோர்வூட் ,கெம்பியன் ,கொட்டியாக்கலை ,பொகவந்தலாவை ,பெற்றசோ ,பொகவான போன்ற தோட்டங்களிலுள்ள தேயிலைத்தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு மாற்றுத் தேயிலைத்தொழிற்சாலைகளுக்கு தேயிலைக்கொழுந்துகள் கொண்டு செல்லப்படுகின்ற போது கழிவு என்ற ரீதியில் நூற்றுக்கணக்கான கிலோ தேயிலைக்கொழுந்துகள் கழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக மேற்படி தோட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகளில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ என்ற ரீதியில் தேயிலைத்தொழிற்சாலைகளில் அரைப்பதற்கு மறுக்கப்பட்டதாகக் கூறி அந்தத்தேயிலைக்கொழுந்துகளை தோட்டங்களில் கொட்டும் நடவடிக்கைகள் தொடர்வதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக தோட்ட நிருவாகம் தமக்குரிய மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மறுப்புத்தெரிவித்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் தமது மேலதிக வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்காக நாளொன்று 35 கிலோ தொடக்கம் 40 கிலோ வரை பறிப்பதாகவும் இவ்வாறு மேலதிகமாக பறிக்கப்படுகின்ற போது நாளொன்றுக்கான சம்பளத்துக்குரய 18 கிலோ கொழுந்தைத்தவிர மேலதிகமாக பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு கிலோவுக்கும் 9 ருபாவை மேற்படி பிரச்சினைகள் காரணமாக தம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்று லெதண்டி தோட்டத்தைச்சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். பொகவந்தலாவை பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட லெதண்டி ,காபெக்ஸ் ,மால்புரோ ,புரோடக் ஆகிய தோட்டங்களில் இடம் பெறுகின்ற இந்த விடயம் தொடர்பாக இந்தக்கம்பனியின் உயரதிகாரிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலதோட்டங்களில் கொழுந்து இல்லாத காரணத்தினால் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்டக்கம்பனிகளுக்கும் வருமானமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது .இவ்வாறானதொரு நிலையில் மேற்படி தோட்டங்களில் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகள் முறையற்ற நிருவாகத்தின் காரணமாக வீணடிக்கப்படுகின்றபடியால் தோட்டத்தொழிலாளர்களும் தோட்ட நிருவாகமும் தமக்குரிய லாபத்தினை இழக்க நேரிட்டுள்ளமையைத் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட கம்பனியின் உயர்மட்டத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாம் இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தினை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்கள் இருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
வத்தளை கடலில் குளிக்கச்சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு
மாணவர்களைத் தேடும் நடவடிக்கைளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு
வருகின்றனர்.
இவ்வாறு கடலலையால் அள்ளுண்டு சென்றவர்கள் பொகவந்தலாவை சீனாக்கலை தோட்டத்தைச்சேர்ந்த
ஹொலிறோசரி பாடசாலையில் கல்விக்கற்கும் மாணவர்கள் இருவரென தெரிய வருகின்றது.
அந்தோனிராஜ் நிரோஷன்( வயது 17 ) ,ராமலிங்கம் சபேஸ்குமார் (வயது 17 ) ஆகிய இரண்டு
மாணவர்களே இவ்வாறு கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்களின் பெற்றோர் வத்தளை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் இந்த மாணவர்களைத்
தேடும் நடவடிக்கைள் தொடருகின்றன.
பொகவந்தலாவையிலிருந்து கடந்த 8 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்திலுள்ள உறவினர்
வீடொன்றுக்குச் சென்றிருந்த போது மேற்படி இரண்டு மாணவர்களும் அன்றைய தினம் மாலை கடலில்
குளித்துக்கொண்டிருந்த போது தீடிரென மேலெழுந்து வந்த கடலலையால் இந்த மாணவர்கள்
இழுத்துச்செல்லப்பட்டனர் என்று சபேஸ்குமாரின் தந்தை ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர்களைத்தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
புதன், 12 மே, 2010
பெருந்தோட்டப்பகுதி அன்னையரின் அவலம்
பெருந்தோட்ட பகுதிகளில் அன்னையர்கள் மற்றைய பகுதிகளில் உள்ள அன்னையர்களை விட தங்களுடைய பிள்ளைகளுக்காக அதிக சிரமங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றனர். அதிகாலையில் எழும்பி பிள்ளைகளினதும் வீட்டாரினதும் தேவைகளை நிறைவுசெய்து வேலைக்கு சென்று வருவது முதல் படுக்கைக்கு செல்லும் வரையில் ஓயாமல் வேலை செய்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. பி;ள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது முதல் பிள்ளைகள் தொடர்பான அனைத்து காரியங்களையும் அவர்களே செய்ய வேண்டி உள்ளது. சமய கடமைகள் செய்வதிலும் பிள்ளைகளை அவற்றில் ஊக்குவிப்பதிலும் கூட தாய்மார்களே அதிக அக்கறை எடுத்துக்கொள்கின்றார்கள். பிள்ளைகள் தொடர்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் கூட்டங்கள் என்பவற்றிலும் தாய்மார்களே பங்குபற்றுகின்றார்கள். ஆனால் பிள்ளைகளுக்காக இவர்கள் எத்தனை காரியங்கள் செய்தாலும் அவர்களுடைய தியாகமும் அர்ப்பணிப்பும் மதிக்கப்படுவதி;ல்லை. வயதான காலத்திலும் அவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பின்னர் தமது பெற்றோர்களை விசேடமாக தாய்மார்களைக் கவனிக்காமல் அனாதரவாக விடும் பல சம்பவங்கள் பெருந்தோட்ட பகுதிகளில் நடக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)