ஞாயிறு, 4 ஜூலை, 2010

மஸ்கெலியா வைத்தியசாலையைத்தரமுயர்த்தவும் : ம.மா.ச.உறுப்பினர் முரளிரகுநாதன்












மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த வைத்தியசாலையைத் தரமுயர்த்தும் பட்சத்தில் பிரதேச மக்களின் வைத்தியசேவையினை ஓரளவு பூர்த்திச்செய்ய முடியுமென்று ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். இன்று அவர் இந்த வைத்தியசாலைக்கு நேரடியாகச்சென்று அந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து வைத்தியசாலையின் நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் கோஷ்டி மோதல் : நான்கு பேர் வைத்தியசாலையில் : ஆறு பேர் கைது

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகவத்தைத்தோட்டத்தில் இடம் பெற்ற கோஷ்டி மோதலில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது : அக்கரப்பத்தனை நாகவத்தைத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக இந்த இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த சிலர் நேற்று 3 ஆம் திகதி இரவு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்பு இந்தச்சம்பவம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று 4 ஆம் திகதி அதிகாலை வேளையில் கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனைக்கு வான் ஒன்றில் வந்த அதே தோட்டத்தைச்சேர்ந்த குழுவினர் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய வீடொன்றுக்குச் சேதத்தினை விளைவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டு வந்த வாகனத்தினைக் கைப்பற்றியதோடு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.