செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மஸ்கெலியா தோட்டமொன்றில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தேயிலைச்செடிகளுக்கிடையில் கிடந்த ஆணொருவரின் சடலத்தினைப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கேற்ப மஸ்கெலியா பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.
நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஹபுகஸ்தென்ன தெபர்ட்டன் தோட்டத்துக்கு அருகில் பிரதான பாதையிலிருந்து 5 மீற்றர் தூரமுள்ள தேயிலைச்செடிகளுக்கிடையில் கிடந்த சடலமொன்றினையே பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று காலை இந்த இடத்திற்கு விறகு சேகரிப்பதற்குச்சென்ற பிரதேச மக்கள் இந்தச்சடலத்தினை கண்ணுற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு அவர்கள் அறிவித்துள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வருகைத்தந்த மஸ்கெலியா பொலிஸார் அட்டன் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்ததன் பின்பு இன்று மாலை சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு அட்டன் நீதிவான் வருகைத்தந்து விசாரணகைளை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சுமார் 48 வயது மதிக்கப்பட்ட இந்த ஆணின் சடலத்துக்கு உரியவர் திவுலாபிட்டிய என்ற இடத்தைச்சேர்ந்தவர் என்றும் இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் ஆள் அடையாள ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேர்க்கஸ்வோல்ட் சிறு நீர் மின் திட்டத்திற்கு தோட்ட மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறு நீர் மின் உற்பத்தி திட்டத்தினால் தாம் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாக தொழிலாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயா ஆற்றின் நீரைத் திசை திருப்பி கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் சிறிய நீர் மின் உற்பத்தித் திட்டமென்றினை மேற்கொள்வதற்கு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிருவாகம் அனுமதித்துள்ளது. இதற்கேற்ப தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நிருமாணப்பணிகள் காரணமாக பெருமளவிலான தேயிலைச் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் கால் நடைகளுக்கான புல் நிலங்களும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தோட்டக்குடியிருப்புக்களை அண்மித்து கால்வாய்கள் அமைக்கப்படுவதால் தோட்டக்குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் இந்தத்திட்டத்திற்காக பெருமளவிலான தேயிலைச் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வேலை நாட்களும் இழக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதே வேளை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறு நீர் மின் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் உரிய பரிகாரங்கள் குறித்து உடனடி உத்தரவாதத்தினை தோட்ட நிருவாகம் வழங்கா விட்டால் இந்தத்திட்டத்திற்கெதிராக கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட போவதாக கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதே வேளை ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தலைமையில் கடந்த 29 ஆம் திகதி இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டமைக்குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் கேர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட மக்கள் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் ,ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.