ஞாயிறு, 3 ஜூலை, 2011

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தோட்டப்பகுதிகளில் ஆரம்பம்

- சோ.ஸ்ரீதரன். -
ஜனாதிபதியின் மகிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள 500 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 50 தோட்டப்பாதைகளை அபிவிருத்திச் செய்யும் திட்டத்தின் அங்குராரப்பண நிகழ்வு கடந்த 3 ஆம் திகதி டிக்கோயா தோட்டத்தில் இடம் பெற்றது. இந்தத்திட்டத்தின் கீழ் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 20 தோட்டங்களிலும் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 20 தோட்டங்களிலும்கொத்மலை மற்றும் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் தலா 5 பாதைகளும் செப்பனிடப்படவுள்ளன. அரசாங்கத்தின் நேரடி வேலைத்திட்டமொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக முதன் முறையாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பொன்றைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளமையைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொழிலாளர்
தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் ,இந்தச்சங்கத்தின் சிரேஷ்ட தொழிலுறவு நிருவாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்து கொண்ட மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட
பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவெல உரையாற்றுகையில் :
மலையகத்தில் ஜனாதிபதியின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சக்தி மிக்க தலைவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் திகழுகின்றார். மலையகத்தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் செல்வாக்கு உள்ள இளம் தலைவராக திகாரம்பரம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அந்த அடிப்படையில் எமது ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டதன் பேரில் 50 தோட்டப்பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதியினை எமது அமைச்சின் ஊடாகப் பெற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் திகாம்பரம் முன்னின்று செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் இந்த நாட்டில் வாழுகின்ற சகல இனமக்களுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி எமது நாட்டு ஜனாதிபதி சேவையாற்றி வருகின்றார். நாட்டு மக்களின் இன்றைய மற்றும் எதிர்கால நலன் கருதி பாரிய அபவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க மலையகத்தில் மேலும் பல அபவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் பேசுகையில் : மலையகத்தமிழ் மக்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கின்ற இன்றைய அரசாங்கத்தக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் மலையகத்தமிழ் மக்கள் நன்றியுள்ளவர்களாக செயற்படவேண்டும் . ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஊடாக மலையகப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் நான் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க தோட்டப்பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக 500 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்காக மலையகத்தமிழ் மக்கள் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப்பாதை அபிவிருத்தித்திட்டத்தினை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்து மேலும் பல அபிவிருத்தித்திட்டங்களை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளேன். ஆகவே நாம் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இந்த அங்குரார்ப்பண நிகழ்வுக்கு எனது அழைப்பினை ஏற்று வந்த பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவெலவுக்கும் சிலர் எதிரப்பு காட்ட முயன்றதாக கேள்விப்பட்டேன் . மலையகத்தமிழ் மக்களுக்குச்சேவை செய்ய முனைகின்றவர்களைத் தடுப்பதற்கு எவருக்கம் அருகதை கிடையாது. மக்கள் செல்வாக்குடன் களத்தில் இருப்பதால் நாம் எவருக்கம் அஞ்சப்போவதில்லை. கடந்த பொதுத்தேர்தலி;ல் தோட்டப்பகுதி மக்கள் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப்பெறச் செய்தார்கள் அந்த அடிப்படையிலேயே தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். இதே வேளை மலையகத்தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த போதும் அந்தக்கட்சியினால் மலையகப்பெருந்தோட்ட மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எவ்விதமான நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை.ஆனால் இன்றைய அரசாங்கத்தின் மூலமாக இந்த மக்களுக்குப்பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகின்றன. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களுக்குத் துரோகம் விளைவித்து வருகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் பேசுகையில் கூறியதாவது : பெருந்தோட்டப்பகுதிகளுக்கான அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாகவும் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எமது தலைவர் திகாம்பரம் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு மூலமாக 50 தோட்டப்பாதைகளை செப்பனிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. தோட்டப்பகுதி மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் ஒன்றான பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது தான் அவர்களின் அன்றாட போக்குவரத்துக்களைச் சிரமமின்றி மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் .அந்த அடிப்படையிலேயே முதற்கட்டமாக 50 தோட்டப்பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் எமக்குக்கிடைத்துள்ளது. இந்தப்பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவெல கலந்து கொண்டிருப்பது எமக்கு இரட்டிப்பு மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை
எமக்க ஒதுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாகவும் தோட்டப்பகுதி மக்களின் தேவைக்கருதி சிறு அபிவிருத்தித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக தோட்டப்பகுதிகளில் குடிநீர்விநியோகக்கட்டமைப்பு ,மின்சாரம் வழங்கல் போன்றனவற்றை செய்து கொடுப்பதிலும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.