புதன், 1 செப்டம்பர், 2010

கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை :பிரிடோ சிறுவர் கழக ஒன்றியம் அறிவிப்பு

கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு மற்றும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய ,சமூக அபிவிருத்தி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள பிரிடோ சிறுவர் கழக ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக இந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
கடந்த மாதங்களில் புஸ்ஸல்லாவை புரொட்டொப், காச்சாமலை ஆகிய தோட்டங்களில் கர்ப்பணித்தாய்மார்கள் லொறிகளில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது லொறிகளில் பிரசவம் நேரிட்டதால் சிசுக்கள் மரணமடைந்த விடயம் பெரிதும் பேசப்பட்டது. இந்த சம்பவங்கள் கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்திற்கான உரிமையை மட்டுமின்றி சிறுவர் உரிமைகளையும் பாரதூரமாக பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டுசெல்லும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியிருந்தது. இது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு தமது அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அறிவித்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு சிறுவர் கழகத்திற்கு அறிவித்திருந்ததுடன் கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் சிறுவர் கழக ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பதிலில் கர்ப்பிணித்தாய்மார்களை லொறிகளில் ஏற்றிசெல்வதற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ள சிறுவர் ஒன்றியம் இவ்விடயத்தை முன்னெடுத்து சென்று தீர்க்கமான முடிவொன்றினை பெற்றுத்தருமாறு அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளதுடன் இவ்விடயத்திற்கு முடிவு காணப்படும்வரை இவ்விடயத்தை முன்னெடுத்து செல்வதென தீர்மானித்துள்ளது. இதேவேளையில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திற்கு, கடிதம் கிடைத்ததாக கூட எவரிடமிருந்தும் பதில் வரவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டும் மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் சமூக பிரச்சினைகளில் சிறுவர்கள் அக்கறை காட்டும்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது தலைவர்களின் கடமையாகும் என்பதை எடுத்துக்கூற விரும்புகின்றது.

நாவலப்பிட்டியவில் டெங்கு நோய்க்கு இலக்காகி சிறுவன் மரணம்











டெங்கு நோய்க்கு இலக்காகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட்ட ஆறு வயது சிறுவனொருவன் சிகிச்சைப்பலனின்றி உயிழந்துள்ளார். நாவலப்பிட்டி நகரசபைக்கு உட்பட்ட சொய்சாகலை பிரதேசத்தைச்சேர்ந்த எஸ்.ஆர்.முனாப் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறிப்பிட்டச்சிறுவனுக்கு கடந்த 25 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதன் பின்பு இந்தச்சிறுவனை அவனின் பெற்றோர்கள் கடந்த 29 ஆம் திகதி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் பின்பு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி நேற்று 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் டெங்கு நோய் அதி தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். இவ்வருடம் ஆரம்பம் முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் 190 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் டெங்கு நோயினால் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் சுகாதாரத்தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேலும் நாவலப்பிட்டி பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவில் 115 பேரும் நுவரெலியா ,மஸ்கெலியா ,கொத்மலை ,தலவாக்கலை ,கொட்டகலை ஆகிய பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் தலா பத்து பேரும் மேலும் கினிகத்தேனை உட்பட பல பிரதேசங்களைச்சேர்ந்த பலர் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர். இதே வேளை கடந்த வருடம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 109 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் இவ்வருடம் இந்தத்தொகை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்தரப்பினர் மேலும் தெரிவித்தனர். இந்த நிலையில் டெங்கு நோய்த்தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் கருத்துத்தெரிவித்தனர்.