வியாழன், 17 ஜூன், 2010

தோட்டப்பகுதி சிறுவர்களின் நலனோம்பு விடயங்களில் அரச நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் : எம்.உதயகுமார் தெரிவிப்பு

பெருந்தோட்டப்பகுதி சிறுவர்களின் நலனோம்பு விடயங்களில் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற சிறுவர்கள் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழந்து வருகின்றனர்.குறிப்பாக தோட்டப்பகுதி சிறுவர்களுக்கு முன்பள்ளிக்கல்வி இதுவரை முறையாக வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தைப்பொறுத்த வரையில் பிரிடோ போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் முன்பள்ளிகளை ஏற்படுத்துவதில் முனைப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் தோட்டப்பகுதிகளில் முறையாக முன்பள்ளிகளை அமைத்துக்கொடுப்பதில் தோட்ட நிருவாகங்களோ அரசாங்கமோ உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் மத்தியில் போஷாக்கின்மை 36.2 வீதமாக காணப்படுவதாக அறிவித்துள்ளது.இவ்வாறு போஷாக்குக்குறைபாடுடைய பிள்ளைகள் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகமாகவுள்ளனர். இவ்வாறு பிள்ளைகள் போஷாக்குறைப்பாடுடன் வாழுவதால் அவர்களின் பல்வேறு ஆளுமை வளர்ச்சிகள் பாதிப்படைகின்றன.அத்தோடு ஏனைய சிறுவர்கள் அனுபவி;க்கக்ககூடிய உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் வருமான தாழ் நிலைமை சிறுவர்களின் வாழக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்டச்சிறுவர்களின் நலனோம்புத்திட்டங்கள் குறித்து அரசாங்கமும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களும் அக்கறையின்றி செயற்படுகின்றமைக் கவலைத்தரக்கூடிய விடயமாகும். இதே வேளை தோட்டப்பகுதிகளில் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் தேவைகள்; என்பன தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படாததால் பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் இதனால் அவர்களில் பல்வேறு உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.. பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள் காட்டும் அக்கறை சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரச நிறுவனங்கள் அக்கறை செலுத்தாமலிருப்பது கவலைத்தரக்கூடிய விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணசபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

மஸ்கெலியா மாவட்டவைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்க்கவும்

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ்ச்செயற்படுகின்ற மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையைப் பிரதேச மக்களின் நலன் கருதி மேம்படுத்துவதற்கு மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபையின் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
மஸ்கெலியா பிரதேசத்தில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்களின் வைத்திய சேவையைப் பூர்த்திச் செய்யக்கூடியவகையில் விசாலமான கட்டிடமொன்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் செயற்பாடுகள் உரியவகையில் இல்லாத காரணத்தினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.தற்போது இந்த வைத்தியசாலையின் மாடிக்கட்டிடங்கள் பல பாழடைந்த நிலையிலுள்ளன.இந்த வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. முக்கிய வைத்திய பிரிவுகள் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன..எனவே இதனைக்கருத்திற்கொண்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைக்குறித்து ஆராய்ந்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ளுவதற்கு மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் கரிசனைக் கொள்ள வேண்டும் : பி.திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அதிக அக்கறையுடன் செயற்படவேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்ட முக்கியஸ்தர்களுக்காக நேற்று 16 அம் திகதி அட்டனில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களான மனோகரன் ,நாகராஜ் ,அந்தோனிராஜ்,சிவகுமார் ,சிவானந்தன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள் ,மாவட்டத்தலைவர்கள் ,தோட்டக்கமிட்டித்தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதன் போது தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம்; கூறியதாவது :
இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் தன்னை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வது ஜனநாய ரீதியான உரிமையாகும் .இந்த உரிமையை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி மக்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு சதிகள் இடம் பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்களை வாக்காளர்களாக பதிவு செய்கின்ற கிராம உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பெருந்தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு என்பது தனியே தேர்தலில் வாக்களிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதொன்றல்ல. உரிய வகையில் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போது அதன் மூலம் நாம் தனிப்பட்ட வகையிலும் சமூக .அரசியல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளைப்பெற்றுக்கொள்ள முடியும்..வாக்காளர் இடாப்புக்கள் மீளாய்வு செய்கின்ற போது கிராமப்பகுதிகளிலும் நகரப்பகுதிகளிலும் அமுல் படுத்தப்படுகின்ற சில நடை முறைகள் தோட்டப்பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழந்து வருகின்றனர்.ஆகவே இந்த நிலையைத் தொடரவிடக்ககூடாது.எனவே எமது தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்தி தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அவர்களுக்கு வழிகாட்டியாக செயற்படவேண்டும்.இதே வேளை நுவரெலியா மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றில் குரலெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலையகத்தின் காமன்கூத்தும் இடம் பெறவுள்ளது.



எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தமிழகத்தின் கோவையில் இடம் பெறுவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24 ஆம் திகதி இடம் பெறவுள்ள கலாசார நிகழ்வில் மலையகத்தின் நாட்டுக்கூத்தான காமன்கூத்து இடம் பெறவுள்ளது. மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தக்காமன் கூத்தில் மலையகத்தைச்சேர்ந்த 14 கலைஞர்கள் பங்கு பற்றவுள்ளனர். உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தலைவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆலோசனைக்கேற்ப மலையகக்கவிஞர் சு.முரளிதரனின் சிபாரிசின்படி மலையகத்தைச்சேர்ந்த ஆசிரியர் பிரான்ஸிஸ் ஹெலனின் நெறியாள்கையில் மலையகக் காமன் கூத்து இந்தச்செம்மொழி மாநாட்டில் மேடையேற்றப்படவுள்ளது.