ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மலையகத்தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்குச் சகலரும் உதவ வேண்டும். : திகாம்பரம் எம்.பி. தெரிவிப்பு






நுவரெலியா மாவட்டத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சகலதரப்பினரும் எவ்வித அரசியல் பாகுபாடுகளுமின்றி செயற்பட வேண்டுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். பொகவந்தலாவைப் பிரதேசத்திலிருந்து இவ்வருடம் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றவுள்ள 600 மாணவர்களுக்கு துரித மீட்டல் வினாவிடை பத்திரங்கள் அடங்கிய பொதிகளை பொகவந்தலாவையில் வழங்கி வைத்துப்பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் பொகவந்தலாவைப்பிரதேச பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தப்பிரதேசத்திலுள்ள 21 பாடசாலைகளைச்சேர்ந்த தரம் ஐந்தைச்சேர்ந்த 600 மாணவர்களுக்கு அவர்களைப்பரீட்சைக்குத்தயார்படுத்தும் வகையில் வினாப்பத்திரங்களை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பெருந்தோட்டப்பகுதி மாணவர்கள் சித்திப்பெறுவது குறைவாகவே உள்ளது.இவர்களுக்கு உரிய வாய்ப்புக்களையும் பயிற்சிகளையும் வழங்குகின்ற போது அவர்களாலும் தத்தமது திறமைகளை வெளிப்படுத்த முடியும்.மாதிரி வினாப்பத்திரங்களை காசுக்குப்பெற்று பரீட்சைக்குத்தயாராக முடியாத நிலைமையில் தோட்டப்பகுதி மாணவர்கள் பலர் உள்ளனர்.இவர்களின் நலன் கருதியே நான் இந்த வினாப்பத்திரங்களைப் பொகவந்தலாவைப் பிரதேச மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கியுள்ளேன்.இதனைப்பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக வருகைத்தந்த மாணவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற மாணவர்களின் நலன் கருதியும் இவ்வாறான கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு கல்வித்துறை சார்ந்தவர்கள் அரசியல் ரீதியான பாகுபாடுகள் காட்டாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு செயற்படுகின்ற பட்சத்திலேயே மலைகத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமது பங்களிப்பினை வழங்க முடியும்.நான் கடந்த காலங்களில் மாகாணசபை உறுப்பினராக இருந்து கொண்டு மக்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்துள்ளதால் தான் என்னை மக்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் எனக்கு வாக்களித்த மக்களுக்குத்துரிதமாக சேவை செய்ய வேண்டிய கடப்பாட்டில் உள்ளேன்.இதனைக்கருத்திற்கொண்டே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்