திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான அடைமழை


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள ஆறுகளிலும் ஓடைகளிலும் கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கேற்பட்டுள்ளது. காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்கள் முழுமையாக நிறைவதற்கு இன்னும் இரண்டு அடி உயரம் நீர் நிரம்ப வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கெனியன் மற்றும் லக்ஷபான போன்ற சிறிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி விடுகின்ற போது அவற்றின் வான்கதவுகள் அடிக்கடி திறந்து மூடிவிடப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது. இதே வேளை அட்டன் நகரில் முறையான வடிகால் வசதிகள் இன்மையால் வெள்ள நீர் பிரதான பாதையை ஊடறுத்துச்செல்வதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இன்றைய மலையகத்தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமரர்சௌமியமூர்த்தி தொண்டான் காரணமானவராவார். பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ன பெருமிதம்

மலையகத்தமிழ்ச்சமூகத்திற்கு மாத்திரமின்றி இந்த நாட்டில் வாழுகின்ற சகல சமூகத்திற்கும் உதாரண புருஷராக செயற்பட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆவார் என்று பிரதம மந்திரி தி.மு.ஜயரண்டன தெரிவித்தார்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு இன்று அட்டனில் இடம் பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவி;ததார்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு இன்று அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அமரர் சௌமிய மூர்த்தித் தொண்டமானின் திருவுருப்படத்திற்கு பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ன ,அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் ,பாரர்ளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ,மாகாணசபை உறுப்பினர்களான செந்தில் தொண்டமான் ,அனுஷியாசிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
இந்த நாட்டில் வாழுகின்ற பெருந்தோட்டச்சமூகம் இன்று இந்த அளவிற்கு முன்னேறியமைக்கு அமரர் சௌமியமூர்த்தித் தொண்டடானின் சிறந்த செயற்பாடுகளே காரணமாகும். முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தொடக்கமுள்ள அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்து தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் மிகவும் கெடுபிடியான நிலைமையிலேயே தனது தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்த அவரை என்றும் நான் மறக்க மாட்டேன். அத்துடன் இவர் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்வுமற்றவர். தோட்டத்தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம் தேவை என்பதை முதல் முதலில் வலியுறுத்தியவர் இவர் தான் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு தோட்டப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தவர். இன்னும் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கபடவேண்டியுள்ளது.இதே வேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார்.

எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். : திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத் தோட்டத்தொழிலாளர் சமூகம் உட்பட அனைத்துத்தரப்பினருக்கும் சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்.இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் காழப்புணர்வுடன் விமர்சனம் செய்யத்தொடங்கியுள்ளனர்.இவ்வாறான விமர்சனங்களைக் குறித்து நான் அலட்டிக்கொள்வதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் நானுஓயா பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடரந்து பேசுகையில் கூறியதாவது :
எனக்கு வாக்களித்த மக்களுக்குச்சிறந்த சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளளேன்.நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்குறித்து எனக்கு வாக்களிக்காதவர்களே பெரிதும் கவலைப்படுகின்றனர்.எனது இந்தத்தீர்க்கமான முடிவு குறித்து எனக்கு வாக்களித்த மக்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் தேவைப்பாடுகள் குறித்தும் எனக்கு நன்கு தெரியும். இவற்றினை நிறைவேற்றும் வகையில் நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு பிறகு மலையகத்தில் அபிவிருத்திக்குறித்து கூடிய கவனம் செலுத்த உள்ளதாக எனக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் தோட்டப்பகுதி மைதானங்கள் மற்றும் பாதைகளைச்செப்பனிடுவதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளேன். இந்த நிலையில் நாம் எதிர்தரப்பில் இருந்து போது எமது ஆதரவாளர்களுக்குப் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எமது அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.