உடபுசல்லாவை றொக்லெண்ட் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 15 குடும்பங்களைச்சேர்ந்த 78 பேர் சூரியகாஹ பத்தன சிங்கள பாடசாலையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கான உடுதுணிகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டச்செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ தெரிவித்தார். அத்துடன் மின்சாரவொழுக்கின் காரணமான பாதிப்படைந்துள்ள உடபுசல்லாவை றொக்லேண்ட் தோட்டத்தொழிலாளர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்டச்செயலாளர் டி.பி.ஜி .குமாரஸ்ரீ மேலும் தெரிவித்தார்.
உடப்புசலாவ- டெல்மார், றொக்லண்ட் டிவிஷனில் இன்று சனிக்கிழமை மாலை 3.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இந்தத் தோட்டத்திலுள்ள முதலாமிலக்க லயன் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியதில் 15 வீடுகள் பாதிப்படைந்தன. இந்த வீடுகளிலிருந்த அனைத்து உடைமைகளும் தீக்கு இரையாகின.எனினும் எவருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.பொதுமக்களும் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சூரியகாஹ பத்தன சிங்கள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோட்ட நிருவாகம் சில உடனடி உதவிகளை வழங்கியது.
இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த வலப்பனை பிரதேச சபையின் புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிஸ கட்சியின் உறுப்பினர் பன்னீர் செல்வம் பாதிப்புக்களை அவதானித்து விட்டு பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு வலப்பனை பிரதேச சபையினால் உதவக்கூடிய உதவிகளை வழங்குமாறு இந்தச்சபையின்; தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.