செவ்வாய், 14 செப்டம்பர், 2010

இ.தொ.கா.வுடன் இணைந்து கொண்ட கணபதிகனகராஜுவுக்கு அரசியற்பிரின் உதவிச்செயலாளர் பதவி

மத்திய மாகாணசபையின் உறுப்பினர் கணபதி கனகராஜிக்கு இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் அரசியற்பிரிவு உதவிச்செயலாளர் பதவி இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக ,கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினால் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளராகவிருந்த கணபதி கனகராஜ் அந்த முன்னணியிலிருந்து விலகி அண்மையில் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{டன் இணைந்து கொண்டமைக்குறிப்பிடத்தக்கது. அதே வேளை இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச்செயலாளராகவிருந்து அந்த முன்னணியிலிருந்து விலகி இ.தொ.கா.உடன் இணைந்து கொண்ட அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரத்திற்கு இ.தொ.கா.வின் உதவிச்செயலாளர்களில்
ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி அமைச்சு – கல்விக்காகவா? கட்சி அரசியலுக்காகவா? பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஆவேசம்

மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்த்pய மாகாணத்துக்கு என வழங்கப்பட்டுள்ள தமிழ் கல்வி அமைச்சு மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றக்கூடிய பணிகளை விடுத்து கட்சி அரசியலை முன்னெடுப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருவதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆசிரியர் இடமாற்றங்கள் பதவியுர்வுகள் வழங்குவதில் நிலவும் குளறுபடிகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்திய ஊவா மாகாண சபைகளுக்கு கீழாக வேறு எந்த துறைக்குமென அல்லாது தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கு என கல்வி அமைச்சு ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. திறனற்ற செயற்பாடுகளால் ஊவா மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு எமது கையை விட்டுச் சென்று பல வருடங்களைக் கடந்து விட்டன. இன்று மத்திய மாகாணத்தமிழ்க் கல்வி அமைச்சு செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கு ஏற்பட்ட நிலை மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் நிலவுகின்றது.
ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த அமைச்சில் அரசியல் தலையீடுகள் இருந்து வந்தபோதும் கடந்த பொதுத் தேர்தலோடு முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட கட்சிசார்ந்த அமைச்சாக அதன் செயற்பாடுகள் மாற்றம் அடைந்து வருவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தை விட குறைவான தமிழ் சனத்தொகை கொண்ட கண்டி , மாத்தளை மாவட்டங்களில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டபோதும் கூட நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தமிழ்மொழிமூல பாடசாலை கூட தேசிய பாடசாலையாக தரமுயரத்தப்படவில்லை. இது மத்திய மாகாண கல்வியமைச்சு தமது கட்சி சார்ந்த அதிகார பிடியில் பாடசாலைகளையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் வைத்துக்கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகும். கண்டி மாத்தளை மாவட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளதனால் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளை கல்வியமைச்சின் ஊடாக இ.தொ.கா தமது கட்சி கூடாரமாக மாற்றியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பாடசாலை நேரங்களில் அதிபர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பிரசார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். இதில் தகைமையில் குறைவாக இருந்துகொண்டு உயர் பதவிகளைப் பெறுவதற்காக அரசியல் தூபம் போடும் சில ஆசிரியர்கள் அதிபர்கள் ஈடுபட்டது உண்மையே. அதே நேரம் தமக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட நேர்ந்த பல அதிபர்கள் ஆசியரியர்கள் இன்று இ.தொ.கா சார்பானவர்களாக மாறி செயற்பட வேண்டியவர்களாக மாறிப்போயுள்ளனர். மத்திய மாகாணத்தமிழ்க் கல்வியமைச்சர் ஒரு பிரதியமைச்சர் போலவும் அதற்கான பிரதான அமைச்சராக மத்தியில் உள்ள கால்நடை, கிராம அபிவிருத்தி அமைச்சரே செயற்படுவதாகவுமே தெரிகிறது. அதிபர், ஆசியரியர்கள் இடமாற்றத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் தலையிடுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனைக்கும் உரியதமாகும். மலையக கல்விக்கு வரப்பிரசாதமாக கிடைத்த அரிய வளங்களும் மூலங்களும் தனிப்பட்ட கட்சி சார்ந்த நலன்களுக்கு பயன்படுத்தப்படுவது மலையகத்தில் வளர்ந்து வரும் கல்வித்துறைக்கு பாரிய சவாலாக அமைந்துவிடும்.

தொழிலாளர்களைப் போன்று ஆசியர்களும் கட்சி அரசியல் மயப்படுவது ஆரோக்கியமானதல்ல. அமைச்சர்களின் ஆள் மாற்றத்துக்கு ஏற்ப தாங்களும் தம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது. கல்வித்துறையினர் அரசியலில் ஈடுபடலாம். ஈடுபடவும் வேண்டும். அது ஒட்டுமொத்த மக்களுக்கான தூரநோக்க அரசியல் இலக்குகளை அடைவதற்கானதாக இருத்தல் வேண்டும். தமது பதவிகளை தக்கவைத்து கொள்வதற்கான கட்சி சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது. மலையகத்தில் கட்சி அரசியல் மயப்படுப்படுத்தப்பட்ட பாடசாலை நிர்வாகங்களுக்கு எதிராக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தற்போது கிளர்ந்தெழ தொடங்கிவிட்டனர். இந்த போக்குகள் பாடசாலைகளின் நாளாந்த நிர்வாகத்தில் இடையூறாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் இறுதியாக பாதிக்கப்படப்போவது மாணவர் சமூகமே. எதிர்கால மலையகமே. நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவும் கட்சி அரசியல் செயற்பாடுகள் தொடருமானால் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி போராட தயங்கமாட்டேன், எனவம் தெரிவித்துள்ளார்.