மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
சனி, 17 ஜூலை, 2010
பதுளையைச் சேர்ந்த மலையகப்பெண் கொழும்பில் அடித்துக்கொலை பிரபா கணேசன் எம்பி பொலிஸ் விசாரணைகளைக் கண்காணிப்பு
பதுளை மாவட்டம், எல்ல, நமுனுகலை, கலுகல தோட்டம், கீழ்பிரிவை சார்ந்த வெள்ளசாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்னாக பணிபுரியும் வேளையில் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலே கடந்த செவ்வாய்கிழமை 13 ஆம் திகதி இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரும், அவரது மாமியாரும் கைதுசெய்யப்பட்டு, புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கண்காணித்துவருகின்றார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக இப்பெண் பணிபுரிந்த வேளையிலே இக்கொடூரச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு திருட்டுச்சம்பவம் தொடர்பிலே எஜமானர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்த பெருக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஷாகுல் ஹமீத் என்ற வீட்டு உரிமையாளரையும், அவரது மாமியாரான னோனா நஜீமா என்பவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேல் விசாரணைகள் தொடர்பிலே கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நேரடியாக கண்காணித்து வருகின்றார்கள். கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்சமயம் கொழும்பு பிரேதச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட அட்டன் ,கினிகத்தேனை ,நோட்டன் ,மஸ்கெலியா ,வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப்பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாதையின் மன்திட்டொன்று சரிந்து அட்டன் - கினிகத்தேனை பிரதான பதையின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்து வருகின்றது. காசல்ரீ ,மவுசாகலை ,கனியன் ,விமலசுரேந்திரபுர ,பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான ,டெவன் ,சென்கிளாயர் , றம்பொடை பான்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர் பெருக்கம் ஏற்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)