ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கூரை உடைந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

கூரையின் மீது நின்று கொண்டு தொலைபேசி கம்பியை உயர்த்திய நபரொருவர் அந்தக்கூரை திடீரென உடைந்ததால் கீழே தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்வமொன்று இன்று 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கொட்டகலை நகரின் ட்ரைட்டன் பஜாரில் இடம் பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு தேர் பவனி இன்று கொட்டகலை நகரூடாக இடம் பெற்றது.இதன்போது கொட்டகலை ட்ரைட்டன் பஜாரில் உள்ள மில்கோ பால்சேகரிப்பு நிலையத்துக்கு அருகில் தேர்பவனி வந்துள்ளது.இதன் போது தேரின் கோபுரத்தில் தொலைபேசி கம்பி ஒன்று உரசும் நிலையில் இருந்ததால் மில்கோ பால் நிலையத்தில் தொழில் புரிகின்ற ஒருவர் அந்த நிலையத்தின் கூரையின் மீது ஏறி தொலை பேசி கம்பியை தடி ஒன்றின் உதவியுடன் உயர்த்துவதற்கு எத்தனித்துள்ளார். இந்த வேளையில் எஸ்பெஸ்ட்ரோ கூரையானது திடிரென உடைந்ததில் கூரையில் மேலிருந்தவரும் திடீரென கீழே விழுந்துள்ளார்.இதன் போது இவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவரைப் பொதுமக்கள் உடனடியாக கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது வழியில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கொட்டகலை மாவட்டவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில்
பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டகலை ட்ரைட்டன் கே.ஓ. தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத்தந்தையான நடராஜ் சுதாகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.