செவ்வாய், 5 அக்டோபர், 2010

கினிகத்தேனையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச்சேர்ந்த 30 வயது இளைஞரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச்சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர் நேற்றுமுன்தினம் 3 ஆம் திகதி தோட்டத்திலுள்ள ஆற்றைக்கடக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.இதன் போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இளைஞர் வீடு திரும்பாதது குறித்து அந்த இளைஞனின் உறவினர்களும் அயலவர்களும் தேடிய போது ஆற்றோரத்தில் குறிப்பிட்ட இளைஞனின் செருப்புகளும் அவர் அணிந்திருந்த சாரமும்; இருந்துள்ளமையைக் கண்ணுற்றுனர். இதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இதன் பின்பு பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று 4 ஆம் திகதி முதல் ஆற்றில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.எனினும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கரையொதுங்கிய நிலையில் இளைஞனின் சடலம் இன்று 5 ஆம் திகதி மீட்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து உயிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தலவாக்கலையில் வெடிப்பொருள் மீட்பு

தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் ஒரு தொகை வெடிப்பொருட்களை
தலவாக்கலை பொலிஸார் நேற்று 4 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் மீட்டுள்ளனர்.தலவாக்கலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து தலவாக்கலை ரயில் நிலையப்பகுதிக்கு மோப்ப நாயுடன் சென்ற பொலிஸ் குழு அங்கு மேற்கொண்ட தேடுதலைத்தொடர்ந்து 14 கிலோ கிராம் வெடிப்பொருளையும் வெடிக்க வைப்பதற்கு உதவுகின்ற 1250 அடி கொண்ட வயர் தொகுதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்கைப்பற்றப்பட்ட பொருடகள் தற்போது தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்டுள்ள இந்த வெடிப்பொருடகள் தொடர்பான அறிக்கை ஒன்றினை நுவரெலியா நீதிமன்றில் சமர்ப்பிதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள்

பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மத்திய மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல்பிரிவு உதவிச் செயலாளருமான கணபதி கனகராஜ் மத்திய மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் வாழும் 50 000 மக்களின் வைத்திய தேவைக்காக இயங்கிவரும் இவ்வைத்திய சாலையில் முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்துடன் இந்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை. மேலும் தாதியர்களுக்கும், சிற்றூழியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு எழுத்தாக்கப் போட்டிகள்

இவ்வருட ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றியம் தமது அங்கத்தவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலிய எழுத்தாக்கப் போட்டிகளை நடத்தவுள்ளது. ஆசிரியர்கள் தாம் எழுத விழையும் ஆக்கங்கள் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டதாக அமைதல் வேண்டும்.
சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும்.பிரசுரிக்கப்படாததாகவும் வேறு எங்கும் சமர்பிக்கப்படாததாகவும் இருத்தல் வேண்டும்.தொனிப் பொருள் சமூக பிரஞ்சை உடையதாக அமைதல் வேண்டும்.கட்டுரைகள் ஆய்வு பூர்வமானதாக இருத்தல் வேண்டும், சான்றாதாரங்கள் காட்டப்பட வேண்டும்.அத்துடன் உள்ளடக்கம், உருவம், அமைப்பு குறிப்பாக கவனத்தில் எடுக்கப்படும். ஒருவர் ஒரு ஆக்கம் மட்டுமே எழுதலாம். ஆக்கங்கள் கணினிபதிப்பு, தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். ஏட்டின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பதியப்பட்டிருத்தல் வேண்டும்.நடுவர் தீர்ப்பே இறுதியானது.மேலும் போட்டிகளில் பங்குபற்றுகின்றவர்கள் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.அத்துடன் தாய் சங்க செயற்குழு உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்கு பற்ற முடியாது.ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறுகின்றவர்களுக்கு முதலாம் பரிசாக 2500 ரூபாவும் இரண்டாம் பரிசாக1500 ரூபாவும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாவும் பங்குப்பற்றியமைக்காக சான்றிதழகளும்; வழங்கப்படும்.அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆக்கங்கள் தொகுப்பாக வெளியிடப்படும். சகல ஆக்கங்களும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன் 133 1ஃ1 திம்புள்ள வீதி அட்டன் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.என்று மலையக ஆசிரியர் ஒன்றியம் அறிவித்துள்ளது.