ஞாயிறு, 27 ஜூன், 2010

பிறந்த சிசு ஒன்றின் மரணத்தினைத் தொடர்ந்து தோட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : புரட்டொப் தோட்டத்தில் சம்பவம்


உரிய சகாதார மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித்தருமாறுக் கோரி புசல்லாவை புரட்டொப் தோட்டத்தொழிலாளர்கள் இன்று 27 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்குத் தோட்ட லொறி ஒன்றில் கர்ப்பிணி தாயைப்பிரசவத்திற்கு அழைத்துச்சென்ற போது வழி நடுவில் லொறியிலேயே அந்தத் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் இடம் பெற்றுள்ளது. இதன் போது பிறந்த சிசு ஒரு சில மணிநேரத்துக்குள் உயிரிழந்த சம்பவமொன்று 25 ஆம் திகதி இரவு நுவரெலியா மாவட்டம் புசல்லாவை புரட்டொப் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. புரட்டொப் தோட்டத்தில் எம்புலன்ஸ் வாகன வசதிகள் இல்லாத காரணத்தினாலும் தோட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் குடும்ப நல மருத்துவரின் உதவி உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினாலுமே இந்த உரியிழப்பு இடம் பெற்றுள்ளதாக தெரிவித்து இன்று இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின்; ஊடாக புரட்டொப் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை இதுவரை திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும் : புசல்லாவ பா.திருஞானம்