இலங்கையின் தேயிலை விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சிக்கண்டு வருவது மற்றும் இலங்கையின் தேயிலையை அதிகமாக கொள்வனவு செய்கின்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையின் காரணமாக இலங்கையின் தேயிலைத்தொழிற்துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருதாக அண்மைக்காலமாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கருத்துத் தெரிவித்து வருகின்றது. அத்துடன் தோட்டங்களின் முகாமையாளர்களும் தோட்டத்தொழிற்துறை வீழ்ச்சிக்கண்டு வருதாக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துரை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் தற்போது வாங்குகின்ற சம்பளத்தில் 100 ரூபா குறைப்பு ஏற்படலாமெனவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு கிலோ தேயிலைத்தூளினை உற்பத்தி செய்வதற்கு 565 ரூபா செலவாகுவதாகவும் அதனால் தோட்டத்தொழிலாளர்கள் ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்துக்காக பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை எவ்விதத்திலும் குறைக்க முடியாதென்றும் அவ்வாறு குறைத்துப்பறிக்கப்படுமானால் அரைநாள் வேதனமே வழங்கப்படுமெனவும் தோட்ட நிருவாகங்கள் தொழிலாற்களுக்கு அறிவித்துள்ளன.எனினும் எட்டு மணி நேரம் வேலை செய்கின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டுமெனவும் தோட்டத்தொழிற்சங்கங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போதைய தோட்டத்தொழிற்துறை தொடர்பாக
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையானது பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. தற்போது நிலவும் குறைவான விலை சூழ்நிலையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை மற்றும் அண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போன்றன காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்ற நிலைமையில் அனைத்து துறைசார்ந்தவர்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்த துறை தற்போது எதிர்கொண்டுள்ள சவாலான நிலையிலிருந்து விடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கும் இந்த நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தற்போதுள்ள நிலை தொடருமாயின் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையை தணிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க தவறும்பட்சத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் தமது நிதி செயற்பாடுகளில் பெரும்பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் இவை தொழிலாளர்களின் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. நூற்றாண்டு காலம் பழமையான பெருந்தோட்டத்துறையை பாதுகாக்கும் வகையில் அவ்வப்பபோது ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்காக சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்துள்ளது. இவற்றின் மூலம் சுமூகமான தீர்வுகளும் எய்தப்பட்டுள்ளன. தகாத வார்த்தை பிரயோகங்கள், உடல் ரீதியான அச்சுறுத்தல்கள், வேலை நிறுத்தங்கள், கலவரங்கள் மற்றும் தேசிய உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் தாம் வரவேற்றதில்லை என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் இது போன்ற அநாகரீகமான செயற்பாடுகளை ஏற்படவிடாமல் அனைத்து தரப்பினரும் இந்த துறையை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட முன்வரவேண்டும். பிணக்குகள் ஏற்படின் அவற்றை சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.