மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 8 அக்டோபர், 2010
சர்வதேச ஒலிம்பியாட் கணித விஞ்ஞானப்போட்டிக்கு ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவன் தெரிவு
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தன் சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற இந்த வருடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் இப்போட்டி நிகழ்ச்சி இந்தோனேசியாவில் நாளை 10 முதல ஆம் திகதி; 18 ஆந்திகதி வரை நடைபெறவுள்ளது. கணிதம் மற்றும் விஞ்ஞான கல்விப்பிரிவில் நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பாடசாலை மாணவருள் அருள்மொழிவர்மன் திஷாந்தனும் ஒருவராவார். இவர் 2009ஆம் வருட சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கும் தெரிவானவராவார்.
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தன் இந்தோனேசியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதிக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் ஏற்படும் செலவுகளை இலங்கை இந்திய சமுதாய பேரவை ஏற்றுக் கொண்டு அதற்கான பணத்தை வழங்கி, பாராட்டியுள்ளது. இப்பாராட்டு வைபவமும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் தலைமைப் பணிமனையில் இடம் பெற்றது.
இப்பாராட்டு நிகழ்வில் பேரவையின் பிரதித் தலைவர் முத்துசாமி, பேரவையின் செயற்றிட்டத் தலைவர் கே. கருணாகரன், கந்தசாமி செல்லகுமார், வைத்திய கலாநிதி ராமசுப்பு, பேரவையின் கௌரவ செயலாளர் தேவராஜ் உட்பட பலரும் பங்குபற்றினர். இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் கௌரவத் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்; சார்பில் பண முடிப்பை பிரதித் தலைவர் முத்துசாமி; செல்வன் அருள்மொழிவர்மன் திஷாந்தனிடம் வழங்கினார்.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள கனிட்ட பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ள ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவன் அருள்மொழிவர்மன் திஷாந்தனுக்கு இப்போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்ற இந்தோனேசியா செல்வதற்கான விமான போக்குவரத்து செலவின் ஒரு பகுதியை மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜர் வழங்கிப் பாராட்டியுள்ளார்.
தேசிய கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் பங்கு பற்றவுள்ள நுவரெலியா மாவட்ட அணிக்குப் பொருளுதவி
அரசாங்க நிருவாக அமைச்சின் 40 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி தங்கக் கிண்ணத்துக்கான கரப்பந்தாட்டப்போட்டியில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்ற அக்கரப்பத்தனை அவுடி கழகத்தின் வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பனவற்றை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் பெற்றுக்கொடுத்துள்ளார்.இந்தப்பொருட்களை அவடி கரப்பந்தாட்டக்குழுவின் பயிற்றுவிப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் அணியின் வீரர்களுக்கு அக்கரப்பத்தனை சின்னத்தோட்ட கொழுந்து மடுவத்தில் வைத்து வழங்கினார். இந்த அண. தேசிய மட்டக்கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கொழும்பில் இடம் பெறவுள்ள போது பங்குபற்றவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் தொடர்ச்சியான அடை மழை
நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழக்கைப்பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொட்ரச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.காசல்ரி ,மவுசாகலை ,கெனியன் ,லக்ஸபான போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்ற இந்த நிலையில் லக்ஸபான ,கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொட்டகலை பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் ஹரிங்டன் பகுதியிலுள்ள 25 வீடுகள் நேற்று 7 ஆம் திகதி மாலை வெள்ள நீரின் பாதிப்புக்கு உள்ளாகியதால் இந்த வீடுகளைச்சேர்ந்த குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில் அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.அத்துடன் நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவொன்று நேற்று இடம் பெற்றதால் இந்தப்பாதையின் ஊடான போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைகளிலும் மாணவர் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அடைமழைக்காரணமாக மலையக நகரங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் தமது வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதே வேளை தொட்ரச்சியான மழை வீழ்ச்சியினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப்பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)