வெள்ளி, 8 அக்டோபர், 2010

மலையகத்தில் தொடர்ச்சியான அடை மழை


நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழக்கைப்பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொட்ரச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.காசல்ரி ,மவுசாகலை ,கெனியன் ,லக்ஸபான போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்ற இந்த நிலையில் லக்ஸபான ,கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொட்டகலை பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் ஹரிங்டன் பகுதியிலுள்ள 25 வீடுகள் நேற்று 7 ஆம் திகதி மாலை வெள்ள நீரின் பாதிப்புக்கு உள்ளாகியதால் இந்த வீடுகளைச்சேர்ந்த குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில் அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.அத்துடன் நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையில் குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவொன்று நேற்று இடம் பெற்றதால் இந்தப்பாதையின் ஊடான போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைகளிலும் மாணவர் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அடைமழைக்காரணமாக மலையக நகரங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் தமது வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதே வேளை தொட்ரச்சியான மழை வீழ்ச்சியினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப்பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: