தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினப் பேரணியும் கூட்டமும் இம்முறை தலவாக்கலை நகரில் இடம் பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலயா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் அம்பந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார். அத்துடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஹான்ரத்வத்தையும் கலந்து கொண்டார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , நிதிச்செயலாளர் எஸ்.செபஸ்டியன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , ஆதரவாளர்கள் , அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் எழுச்சி மேதினத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்தக்கூட்டத்தில் அரசாங்கத்தின் விசேட பிரிதிநிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ பேசும் போது கூறுகையில் :
' இந்த நாட்டில் 30 வருட கால யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக மேதின விழாக்களைக் கொண்டாடுவதற்குமான வழியினை ஏற்படுத்தியுள்ளார்.அத்துடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார்.மலையகத்திலும் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்தச்சங்கத்தின் தலைவர் திகாம்பரம் இந்த மக்களுடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். மேலும் மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் இவருக்குத் தேவையான விடயங்களை நாம் செய்து கொடுப்போம் ' என்றார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் பேசுகையில் கூறியதாவது :
' தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சதிகளையும் மோசடிகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது.இந்த அநீதிகளுக்கெதிராக தொழிலாளர்களின் சக்தியைத் திரட்டிக்கொண்டு போராடுவோம். தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக தொழிலாளர்களைத் தெளிவுபடுத்துவோம். கடந்த கூட்டொப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை.இதனை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக கொட்டகலையில் தொழிலாளர் சார்பான அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராடியபோது குடிபோதையில் வந்த குண்டர்கள் அந்தப்போராட்டத்தினைக் குழப்பியடித்தனர். எனினும் நாம் கூட்டத்தினைத் தொடர்ந்து நடத்தி தொழிலாளர்களைத் தெளிவு படுத்தினோம்.
இவ்வாறு தொழிலாளர்களுக்கெதிரான சக்திகளை ஓரங்கட்டுவதற்கு அவர்களின் தொழிற்சங்க அரசியல் பலத்தினை இல்லாமல் செய்ய வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. இந்தக்கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் குறைந்த சம்பள அதிகரிப்பினைக் கொண்ட கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்தத்துரோகத்தனத்தினை இந்தச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வேலாயும் மேற்கொண்டுள்ளமை தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூடடத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளமையானது எமது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தினையும் வெளிப்படுத்துகின்றது.அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிகாலத்தில் நாடு பல்வேறு அபிவிருத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. மலையகத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
கடந்த 50 வருட காலமாக மலையக மக்களை ஏமாற்றி வந்தவர்கள். திகாம்பரத்தின் வருகைக்குப் பின்னர் ஓடி ஓடி வேலை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நாட்டில் சுமுகமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது :
தோட்டத் தொழிலாளியின் பிள்ளையான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து அவற்றினை அவளிக்கொணருவதில் நேர்மையாக செயற்பட்டு வருவதால் தான் இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரின் பின்னால் அணித்திரண்டுள்ளனர். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடுகின்ற போது அதனைத் தடுக்க நினைக்கும் சக்திகளுக்குச் சவால் விடும் தலைவராக திகாம்பரம் செய்றபடுகின்றார். நேர்மையான , கட்டுக்கோப்பான புத்திசாதுர்யமான இளைஞர்கள் அவர் பின்னால் பக்கபலமாக உள்ளனர். திகாம்பரத்தின் சக்தி என்ன என்பதை இன்று அரசாங்கமும் மலையகமும் புரிந்து கொள்கின்ற மேதினக் கூட்டமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இந்தக் கூட்டம் அமைகின்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். பிலிப் பேசுகையில் கூறியதாவது :
அமரர் வி.கே. வெள்ளையன் அவர்களால் 1965. 05. முதலாம் திகதி தொழிலாளர் வர்க்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் இன்று தலைவர் திகாம்பரத்தின் வருகைக்குப் பின்னர் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து செயற்படுகின்ற தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் செயற்படுகின்றது.
தொழிலாளர்களுக்காக போராடுகின்ற போது அந்தப் போராட்டத்தினை குண்டர்களைக் கொண்டு அடக்க முற்படுகின்ற தொழிற்சங்கம் மலையகத்தில் உள்ளமைக் குறித்து வெட்கமடைகின்றேன்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங். பொன்னையா பேசுகையில் கூறியதாவது :
தோட்டத் தொழிலாளர்களுக்கு உண்மையாக செயற்படுகின்ற தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் செயற்படுகின்றது. தலைவர் திகாம்பரத்தின் நேர்மையான செயற்பாடுகளால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்கள் உத்வேகமடைந்துள்ளனர். இந்த உத்வேகத்தின் மூலமாக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்போம்.