பெருந்தோட்டப்பகுதி தமிழ் மக்கள் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செனன் இளைஞர் சேவைகள் மன்றம் , சேவா லங்கா நிறுவனம் , பவர் பிளாண்டேசன் நிறுவனம் என்பனவற்றின்; ஏற்பாட்டில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாக செனன் தோட்டத்தில் இடம் பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்; நிஹால் வீரசூரிய , அம்பகவ பிரதேச சபை உறுப்பினர் கே.சுரேஷ்குமார் , அட்டன் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி தவக்குமார் , அம்பகமுவ பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சந்திரமோகன் , செனன் இளைஞர்கழகத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தொடரந்து பேசுகையில் கூறியதாவது :
பிரதேச செயலகங்கள் , காவற்துறை நிலையங்கள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் ஊடாக தமிழ் மொழி மூல சேவைகள் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்களானால் அதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
மலையகப்பகுதிகளில் செயற்படும் அரச நிறுவனங்களில் தமிழ் மக்கள் தமது சேவைகளைப் பெற்றக்கொள்வதில் இடை தரகர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே தாம் கடமையாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை அரச நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்களின் மத்தியல் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படுகின்ற பட்சத்திலேயே மலையகப்பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான சேவைகளைப் பெற்றக்கொள்ளக் கூடியதாகவிருக்கும். அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற போதும் தமிழ் மக்களினால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிமூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையுள்ளது. தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கூட தமிழர்களிடம் சிங்கள மொழியில் உரையாடி பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது.
எனினும் தமிழ் மொழி தெரியாத பொலிஸாரிடம் தமிழ் மொழியில் தமது முறைப்பாடுகளை எழுதி சமர்ப்பிக்கும் நடைமுறையும் இந்த பொலிஸ் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தோட்டப்பகுதி மக்கள் தமது முறைப்பாடுகளை தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு பொலிசுக்குச் சென்ற முறையிடும் நிலைமையே இன்னும் தொடர்கின்றது. இந்த நிலைமை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மலையகப்பகுதிகளிலுள்ள அரச வங்கிகள் பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவனங்களில் சேவையாற்றுகின்றவர்களிடத்தில் தமிழ் மொழியில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் . தமக்கு ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகள் தெரியும் என்ற ரீதியில் நாம் செயற்பட தொடங்கினால் காலப்போக்கில் தமிழ் மொழிக்குரிய அரசகரும மொழி என்ற அந்தஸ்து வலுவிழக்கக் கூடிய நிலைமை ஏற்படலாம். இதனை தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற ஆவணங்களில் தமிழ் மொழி பிரதிகள் வழங்கப்படாவிட்டால் அவற்றினை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழ் மொழி ஆவணங்களைத் தருமாறு நிர்ப்பந்திக்க வேண்டும். அரச நிறுவனங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தால் தமிழ் மொழிப்பெயர்;ப்பினைக் கோர வேண்டும். ஆவணங்கள் , விண்ணப்பப்படிவங்கள் என்பனவற்றைத் தமிழ் மொழியிலேயே நிரப்ப வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற போது அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்குத் தமிழ் மொழியிலும் தாம் சேவையாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்த முடியும். அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுமானால் அவ்விடயம் தொடர்பாக மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட வேண்டும்.