திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்று முரளிரகுநாதன் தெரிவிக்கின்றார்.











கொட்டகலை
மாவட்ட வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அந்த மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் இடம் பெற்ற சந்திப்புக்குப் பிறகு கருத்துத்தெரிவித்த போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் :
கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் நீர்பற்றாக்குறை ,சிற்றூழியர் பற்றாக்குறை மற்றும் உள்ளகத்தொலைத்தொடர்பாடல் வசதியின்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றினை மத்திய மாகாணசுகாதார அமைச்சின் ஊடாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் .அத்துடன் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மூலமாக உள்ளகத்
தொலைத்தொடர்பாடல் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.என்றார்.

கொட்டகலையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொட்டகலை ட்ரைட்டென் தோட்ட கே.ஓ தோட்டத்தில் இன்று மாலை குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை ட்ரைட்டென் தோட்ட கே.ஓ தோட்டத்தில் தனது விவசாயத்தோட்டத்தில் விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபரொருவரை திடீரென வந்த நூற்றுக்கும்
மேற்பட்ட குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளன. இதன் போது இவரைப் பாதுகாப்பதற்கு முயன்ற மேலுமொரு நபரையும் அந்தக்குளவிகள்
தாக்கியுள்ளன. இவ்வாறு குளவிகள் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உடனடியாக கொட்டகலை மாவட்டவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய கிறேஹெட் தோட்டச்சிறுவர்களின் நலன் கருதி இலசவ வைத்திய முகாம்.






நாவலப்பிட்டி மஹிந்தானந்த அபிவிருத்தி மன்றம் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்பன ஏற்பாட்டில் நாவலப்பிட்டி கிறேஹெட் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இலசவ வைத்திய முகாமொன்று இடம் பெற்றது. இந்த வைத்திய முகாமில் கிரேஹெட் மேற்பிரிவு ,கீழ்ப்பிரிவு ,சமர்செட் ,அலுகெல ,பரணகல ஆகிய தோட்டங்களைச்சேர்ந்த 183 சிறுவர்கள் பயன் பெற்றனர். இந்த வைத்திய முகாமில் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தோட்ட சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.எம்.கிருஸ்ணமூர்த்தி , தோட்ட முகாமையாளர் சமிந்த குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

கெலிவத்தைத்தோட்ட முதியோர் சுற்றுலாப் பயணம்.















பத்தனை
கெலிவத்தை தோட்ட நிருவாகமும் எப்.எல்.ஓ நிறுவனமும் இணைந்து பொது நல சமூக சேவை திட்டத்திற்கேற்ப ஏற்பாடு செய்த சுற்றுலா பயணத்தின் போது இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த ஓய்வுப்பெற்ற தொழிலாளர்கள் 40 பேர் கெலிவத்தைத்தோட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீ கணேசன் தலைமையில் பங்கு பற்றினர். இவர்கள் இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்பு கண்டி மாவட்டத்திலுள்ள சில முக்கிய சில இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பின்பு தோட்டத்திற்குத் திரும்பினர்.

அட்டனில் முச்சந்தி இலக்கிய வட்டத்தின் சந்திப்பு









அடுத்த வருடம் இலங்கையில் இடம் பெறவுள்ள உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மலையக எழுத்தாளர்களின் பங்களிப்புத் தொடர்பாக முச்சந்தி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் அட்டனில் நேற்று இடம் பெற்றது
இந்த நிகழ்வில் மலையக இலக்கிய ஆர்வலர் லெனின் மதிவாணம் கருத்துரை வழங்கும் போது உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மலையகத்தில் பிரதேச வாரியாக எழுத்தாளர்கள் பங்கு பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது லண்டனில் தற்போது வாழுகின்ற சாகித்திய பரிசு பெற்ற எழுத்தாளர் வவுனியூர் ஆர்.உதயணனுக்கு மலையக எழுத்தாளர்கள் சார்பான பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் எழுத்தாளர் அந்தனிஜீவா தலைமையில் கொழுந்து சஞ்சிகை அறிமுகவிழாவும் இடம் பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் திடீர் மரணவிசாரணையாளர்களுக்குப் பணிமனைகள் அமைக்குமாறு கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு மத்திய மாகாணசுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கரப்பத்தனை ,கொட்டகலை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகள் உள்ள பிரதேசங்களில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவையினை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு
அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சருக்குக் கடிதம் மூலம் தான் அறிவித்துள்ளதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.