புதன், 21 ஜூலை, 2010

அட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கான வள அறை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.






நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தில் மாத்திரே விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கான பிரிவு ஒன்று சிறப்பாக செயற்படுகின்றது என்று அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் தெரிவித்தார். அட்டன் பொஸ்கோ கல்லூரியில்; கல்விகற்கின்ற விசேட தேவைக்குரிய மாணவர்களின் நலன் கருதி அட்டன் நகரின் பிரபல வர்த்தகர் டி.கே.வீரதுங்க அவர்களினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தினை இன்று திறந்து வைத்துப்பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் விசேடத்தேவைக்குரிய மாணவர்களுக்கென்று
வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த வகுப்புகளுக்கு விசேடத்தேவைக்குரிய தமது பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் பொஸ்கோ கல்லூரியின் விசேடத்தேவைக்குரிய மாணவர்கள் சிறந்த முறையில் செயற்படுகின்ற வகையில் அட்டன் நகர வர்த்தகர் டி.கே.வீரதுங்கவின் நிதியுதவியினால் சிறந்த வகுப்பறை கட்டிடமொன்று கிடைக்கப்பெற்றமைக்காக அட்டன் கல்வி வலயத்தின் சார்பாக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அட்டன் பொஸ்கோ கல்லூரியில் செயற்படுகின்ற விசேட தேவைக்குரிய மாணவர்களின் நலன் கருதி அட்டன் நகரின் பிரபல வர்த்தகர் டி.கே.வீரதுங்க அவர்களினால் வகுப்பறை கட்டிடமொன்று .இதன் திறப்பு விழா இன்று இடம் பெற்ற போது வர்த்தகர் டி.கே.வீரதுங்க ,அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் ,அட்டன் கல்வி வலயத்தின் விசேடத்தேவைப்பிரிவு பாடத்துறையின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி .டோசன் ,பாடசாலை அதிபர் என்.எஸ்.குரூஸ் ஆகியோரை மாணவர்கள் வரவேற்பதையும் வகுப்பறையை அதிதிகள் பார்வையிடுவதையும் விசேடத்தேவைக்குரிய வகுப்பின் மாணவர்களையும் படங்களில் காணலாம்.

மணிச்செய்திகள்

மலையக மாணவர் கல்வித்தொடர்பான செயலமர்வு
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று் 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரை அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெறவுள்ளது. மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியரமச்சின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தச்செயலமர்விற்கு மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி.அனுஷியா சிவராஜா மற்றும் இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கால்நடை அபிவிருத்தி , கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மலையக இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் வாய்ப்பு

மலையகப்பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் பயிற்சிகளைக் கண்டி இந்திய உதவி தூதரகத்தின் ஏற்பாட்டில் வழங்குவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் மேற்கொண்டு வருகின்றார். கண்டியிலுள்ள இந்திய உதவி தூதுவருடனான பேச்சுவார்த்தையைத்தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார் இதற்கேற்ப தரம் 9 வரை கல்வி கற்றவர்களுக்கான சுயத்தொழில் பயிற்சியினை வழங்குவதற்கும் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வரை கல்விக்கற்றவர்களுக்கு கணனி பயிற்சிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பயிற்சி நெறிகளில் பங்குபற்ற விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்பதாக சம்பந்தப்பட்ட இளைஞர் யுவதிகள் தத்தமது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மற்றும் தலவாக்கலை பணிமனைகளில் ஒப்படைக்குமாறு மத்திய மாகாணசபையின் உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அட்டன் வலய ஆங்கில மொழித்தினப்போட்டிகள்
அட்டன் கல்வி வலய மட்ட ஆங்கில மொழித்தினப்போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அட்டன் பொஸ்கோ கல்லூரியில் இடம் பெறவுள்ளது. இந்தப்போட்டிகளில் அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா ,நோர்வூட் அட்டன் ,கினிகத்தேனை ஆகிய கல்விக்கோட்டங்களைச்சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்று அட்டன் கல்வி வலயத்தின் ஆங்கில மொழிப்பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் அருளாந்தராஜா தெரிவித்தார்.
அட்டன் நகர அபிவிருத்திக்கு அமைச்சரிடம் நிதிகோரல்
அட்டன் - டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடம் சுமார் 20 மில்லியன் ரூபா நிதியைத் தான் கோரியுள்ளதாக அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். தரவளை ,குடாஓயா ,காமினிபுர போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்படவுள்ள சில உட்கட்டமைப்புத்திட்டங்களுக்கே இந்த நிதியைக்கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.