செவ்வாய், 7 மே, 2013

தோட்டத் தொழிலாளர்களை இ.தொ.கா. குண்டர்கள் தாக்குவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் : திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு


கடந்த வாரம் இடம்பெற்ற எமத தொழிலாளர் தேசிய சங்க மேதினத்துக்கு வருகைதந்த எமது ஊவா மாகாண ஆதரவாளர்கள் பண்டாரவளை பணிய பூனாகலை தோட்டத்தில் நேற்று  அதிகாலை இ.தொ.கா காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொழிலாளர் தெசிய சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என தொழிலாளர் தேசிய சங்க தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் எமது தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத கையாளலாகதவர்கள் நடுராத்திரியில் எமது ஆரவாளர்களின் வீடுகளை சேதப்படுத்தியும் அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். ஊவா மகாணத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டாமான் தனது அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான எமது அதரவாளர்கள் தற்போது வைத்தியாசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆதரவாளர்கள் கடந்த வாரம் எமது மேதினத்தில் அர்ப்பணிப்போடு கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தாக்குதல் நடவடிக்கை இ.தொ.காவின் திட்டமிட்ட மிலேச்சத்தனமான செயற்பாடு என்பதை நாம் உறுதிபட தெரிவிக்கின்றோம். கடந்த சனிக்கிழமை பதுளையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையில் எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டம் திட்டப்பட்டமை எமக்கு தெரியவந்தது. நாம் எமது ஆதரவாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு கூறியதுடன் கடந்த ஞாயிறு இந்த சதித் திட்டம் தொடர்பில் எமது ஆதரவாளர்கள் பண்டாரவளை பிரதேச பொலிஸ் மற்றும் ரகசிய பொலிஸ் அதிகாரி அலுவலகங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துமுள்ளனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை தமது திட்டத்தின்படி நிறைவேற்றமுடியாத சதிகார மிலேச்சக்கும்பல் நேற்று நள்ளிரவில் கோழைத்தனமாக ஏழைத்தொழிலாளர்களின் வீடுகளை புகுந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமுற்ற எமது ஆதரவாளர்கள் தியத்தலாவ பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். அதே நேரம் தாக்குதலுக்கு வந்த காடையர் குமபலில் 3 பேரை தோட்ட பொதுமக்கள் கையோடு பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் காடையர் கும்பலைச் சட்டத்திற்கு முன்னிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பொலிஸ் உயர் மட்டத்தினருக்கும் நாம் முறைப்பாடுகளைச் செய்துள்ளோம்.
தாக்குதலுக்கு வந்த கும்பலில் இருந்து பிடிபட்டவர்களை நாமும் திருப்பித்தாக்கியிருக்க முடியும். ஆனாலும் நாம் சட்டத்தினை கையில் எடுத்துக்கொள்ளமல் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை ஒப்படைத்துள்ளோம். காரணம் அவர்கள் ஏவிவிடப்பட்டவர்களே இந்த தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாகும். மலையக மக்களிடையே இத்தகைய பிளவுகளை ஏற்படுத்தி எமது இளைஞர்களையே ஏவிவிட்டு மோதவிட்டு தங்களது அரசியலை முன்னெடுக்க முயலும் இ.தொ.காவின் அநாகரீக அரசியலை அம்பலப்படுத்துவதே எமது நோக்கம். தஞ்சாவூரில் இருந்து வந்து இங்கு தமிழ் சினிமா பாணி அரசியலை செய்துவருகிறார்கள். இந்த வில்லத்தனங்களுக்கு மலையக இளைஞர்கள் கதாநாயகர்களாகி பாடம் புகட்டும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கடந்த மாதம் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வுக்கான போராட்டத்தின்போதும் இதற்கு முன்னர் ஊவாவிலும் எமது தொழிலாளர் தெசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மிலேச்சத்தனமான நவடிக்கைள் மூலம் இ.தொ.கா எமது அமைப்பின் வளர்ச்சிமீது கொண்டிருக்கும் பீதி வெளியே தெரிகின்றது. இது அவர்களது அழிவுகாலம் நெருங்கிக்கொண்டிருப்பதையே காட்டி நிற்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தாய் இறந்தமையைத் தாங்கிக் கொள்ளாமல் அதிர்ச்சியில் ஓடிய மகள் உயிருடன் மீட்பு



திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டக்கலை பொரஸ்கிறிக்  தோட்டத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓடி காணாமல போன யுவதி நேற்று முன்தினம் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளார்.  பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்வேன்ன காட்டுப் பகுதியில் வைத்து குறித்த யுவதி  உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்ற பொது மக்கள் யுவதியைக் கண்டு பின் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பத்தனை பொலிஸார் யுவதியை மீட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட யுவதி பயந்து, பேச முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சைகளின் பின்பு குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளார். கொட்டக்கலை - மூங்கில் கொட்டக்கலை (பொரஸ்ட்கிறீக்) பகுதியில் தனது தாய் இறந்த  செய்தியைக் கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போன சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தாயின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதன் பின்பே யுவதி வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் 1400 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

மத்திய மாகாணத்திலுள்ள  பாடசாலைகளில் சேவையாற்றும் வகையில்   1400  பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
மத்திய மாகாணத்திலுள்ள கண்டி , மாத்தளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இந்தப் பட்டதாரிகளை  ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க அறிவித்துள்ளார்.
தற்போது மத்திய மாகாணத்தில் முப்பதாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் அவர்களில் அநேகமானவர்கள் கலை பட்டதாரிகள் எனவும் முதலைமைச்சர் சுட்டிக்காட்டினார். மத்திய மாகாண பாடசாலைகளில் கடந்த பல வருடங்களாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் காணப்பட்டன. இந்த  வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் தகைமை வாய்ந்தவர்கள் நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு, மே மாத நிறைவுக்குள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மத்திய மாகாண முதலமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.