உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதலாம் திங்கட்கிழமை உலக குடியிருப்பாளர் தினம் கொண்டாப்பட்டுவருகின்றது. இத்தினமானது 1986 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் அங்கீகரிக்ப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதன் முதலாவது மாநாடு நைரோபி நகரில் நடைபெற்றது. இதன் தொனிப்பொருளாக 'வாழ்விடம் என்பது எனது உரிமை' (ளூநடவநச ளை அல சுiபாவள) அமைந்திருந்தது. இவ்வருடம் இதற்கான தொனிப்பொருள் 'நகரங்கள் மற்றும் காலநிலை மாற்றம்' அமைந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் இலங்கையிலும் ஒவ்வொருவருடமும் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்புலத்தில் இலங்கையில் வாழும் மக்களும் அவர்களுக்கான குடியிருப்புகளும் பற்றி பேசப்படவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
இலங்கையின் குடியிருப்புகளை பற்றி பார்க்கவருகின்ற போது இலங்கையில் முக்கியமான குடியிருப்பு வகைகளாக நகரக் குடியிருப்பு, கிராமக் குடியிருப்பு, தோட்டக்குடியிருப்பு என பிரதான வகைப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளன. இதில் முதல் இரு வகையான குடியிருப்புகளும் இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனக் கட்டமைப்புகளின் கீழும் அதாவது, நகரக் குடியிருப்புகள் நகரசபைகளின் கீழும்;, கிராமக் குடியிருப்புகள் பிரதேசசபைகளின் கீழும் வருகின்றன. பெருந்தோட்டங்களை மையப்படுத்தி சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளே இலங்கையின் தோட்டக்குடியிருப்புகளின் கீழ் வருகின்றன. இவை முன்னர் நேரடியாக தோட்ட நிருவாகத்தினால் நிருவகிக்கப்பட்டதோடு, தற்போது அது கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற நிலையே காணப்பட்டாலும் தொடர்ந்தும் தோட்ட நிரவாகத்தின் தலையீடுகள் காணப்படுகின்றமை அநேகமாக அண்மைக் காலங்களில் சுட்டிக்காட்டப்படும் விடயமாகவுள்ளது.
ஆரம்பத்தில் குறிப்பட்டது போலவே நகரக் குடியிருப்புகளும், கிராமக் குடியிருப்புகளும் யாரோ ஒரு நபருக்கு செர்ந்தமானவையாக இருக்கின்றன. அதாவது தனிநபர் ஒருவருக்கு சொந்தமானதாக அல்லது கூட்டுடமையாக இருக்கின்றது. அதன் உரிமையினை அவர் அனுபவிக்கக் கூடியநிலை உண்டு. அவர் இதனை அனுவிக்கவும், விற்கவும் உரிமையுடையவராக உள்ளார். இவர்களது காணிக்கான உரித்துப் பத்திரம் முதலியவை அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு வழஙக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்நிலையினை மலையக சமூகத்தோடு ஒப்பீட்டு பார்ப்பின் நிலை தலைகீழாக உள்ளதனை அவதானிக்கலாம். 200 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் நிலை, இன்றும் கேள்விக்குரியானதாகவே உள்ளது. தோட்டங்கள் முன்பு ஆங்கிலேயர் உடைமைகளாகவே காணப்பட்டன. அப்போது ஆங்கிலேயர் இலங்கையில் பயன்படுத்தாத காட்டுப்பகுதிகளை தம்வசப்படுத்திக் கொண்டதோடு மலைநாட்டு சிங்களவர்களது காணிகளை பணம் கொடுத்தே பெற்றுள்ளனர். பெருந்தோட்டத்தொழில் துறை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியபோது பெரும்பான்மை கண்ணை குத்தியது. இதன்போது இந்தியத் தொழிலாளர்கள் தமது வாழ்விடயங்களையும் பொருளாதார நிலவுரிமையையும் பறித்துக்கொண்டதாக எண்ணினர். இது பெருபான்மை அரசியல் தலைவர்களுக்கு மனதில் தைத்து வைத்த விடயமாக மாறிப்போயின. தோட்டங்கள் அரசு உடைமையாக்கப்பட்டபோது தோட்டக் குடியிருப்பகளுக்கு உரித்துப்பெற்றுக் கொடுத்திருப்பதற்கு சந்தர்ப்பங்கள் பல வாய்த்தபோதும் அதனை மலையகத் தலைமைகள் பெற்றுக்கொள்ள சரியான வழிவகைகளை கையாளவில்லை. தொடர்ந்தும் அரச தோட்டங்கள், அரச லயன்களிலேயே இம்மக்கள் முடக்கப்பட்டனர்.
ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 2000 வருடத்தில் 'யாவருக்கும் புகலிடம்' என்ற எண்ணக்கருவின்கீழ் பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு கிராமங்கள் (கம) உருவாக்கப்பட்டன. இவை மலைகயத் தமிழரின் இனச் செறிவினை திட்டமிட்டு அழிக்கும் நோக்குடையதாக காணப்பட்டது. அவரின் காலத்திலேயே மலையகத் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கண்டிருக்க முடியும். அதுவும் கைகூடாமலேயே போய்விட்டது. பின்னர் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை சொந்தமாக்குவதாக பிரசாரம் செய்யப்பட்டதோடு, அதற்காக தனியானதொரு அமைச்சாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இக்காலத்தில் இதன் அமைச்சராக இருந்தவர் இதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச்சஸ் நிலத்தினை வழங்கியதோடு, குறித்த காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 30000.00 கடனாக வழங்கப்பட்டதோடு, இக்கடனை 15 வருடக்காலத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடும், இவ்வாறு இத்தொகையினை கட்டிமுடித்த பின்னர் காணிகளுக்கான உரித்து பத்திரம் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. எனினும் இது இன்றளவிலும் வெறும் நீர் மேல் எழுத்தாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆட்சியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் நுவரெலியாவாழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு தமது குடியிருப்புகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கான உரித்துப்பத்திரம் ஒன்றை வழங்கியிருந்தார். அதுவும் நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. இவ்வாறு தொடர்ந்து இந்நடைமுறைகள் சாத்தியம்ற்று போவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமே (Pர்னுவு - வுசரளவ) பெரும்பங்கு ஆற்றியுள்ளது. இந்நிறுவனமானது பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்து லயத்துவாசிகளாவே வைத்திருப்பதற்கு முனைப்பு காட்டி வருகின்றது. இதன் பெறுபேறாகவே லயத்து அமைப்பு முறை மாடிவீட்டுத் திட்டத்தின் கீழ் மாடி லயங்களாக புனர்ஜென்மம் பெற்றன.
இவ்வாறானதொரு பின்புலத்தில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'ஜன செவன திட்டம்' என்ற ஒன்றின் மூலம் 'யாவருக்கும் வீடு' என அறிவித்திருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100,000 வீட்டுத்திட்டம் என அது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு குறைந்த வருமானம் பெறுகின்ற நகரை அண்டிவாழும் மக்களுக்காகவும் இரண்டு பேர்ச்சஸ் நிலம் எவ்வித கட்டணங்களும் இன்றி வழங்கப்படும் என எழுதப்பட்டுள்ளமையையும் குறிப்பிட்டு காட்டவேண்டியதோடு இதில் வேண்டுமென்றே பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை உள்ளடக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.
அதேப்போன்று 2010 ஆம் ஆண்டு அவருடைய மகிந்த சிந்தனை பாகம் இரண்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலவுரிமை தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஐ றடைட pசழஎனைந ய pடழவ ழக டயனெ வழ நயஉh Pடயவெயவழைn றுழசமநசள...' என தொடங்குகின்றது. அதாவது ஒவ்வொரு பெருந்தோட்ட தொழிலாளருக்கும் ஒரு பகுதி நிலம் வழங்கப்படும். இதில் அவர்கள் விரும்பிய விடயங்களை (உற்பத்திகளை) செய்துக்கொள்வதற்கு ஏனைய பிரஜைகளுக்கு உள்ளவாறான உரிமையினை பெற்றுக்கொடுப்பேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெருந்தோட்டங்களில் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களுக்கான தனியான வீட்டுத் திட்டம் ஒன்று 'ஜன செவன' திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இதன் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக உள்ள திட்டத்தின்படி இருவது வருடங்களின் பின்னர் ஏழு பேர்ச்சஸ் இலவச நிலம் உரித்தாகும். எவ்வாறாயினும் இவ்வாறு வழங்கப்படுகின்ற நிலங்களை அவர்களின் உரிமையாக்குவேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்ட முடியும்.
எனினும் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களின் முதலாவது தவணைக் காலத்தை முடித்துகொண்டது மட்டுமல்லாது, இரண்டாவது பதவிக்காலத்திலும் ஒரு வருட பூர்த்தியினை நவம்பர் மாதம் கொண்டாட இருக்கும் தறுவாயில் இதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு இருக்க மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் 'எனது வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை' என குறிப்பிட்டிருந்தமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எனினும் கடந்த வருடமளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலை பிரதேசத்தில் இருபத்தைந்து தனிவீட்டுத் தொகுதிகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது என்ற செய்தியும் பத்திரிகையில் வெளிவந்தது. இது பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கு கிடைத்துள்ளது என்ற விடயம் ஓரளவு திருப்தி அளித்தாலும் இதற்கான உரித்துபத்திரம் தொழிலாளர்களுக்கு கிடைத்ததா என்பது ஐயத்திற்குரியதே.
அதேவேளை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்த தோட்டத் தொழிலாளர்களுக்காக தலவாக்கலை நகரத்திற்கு அண்மையில் பாரிய தனி வீடமைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இவ்வீடுகளுக்கும் தனியான உரித்துப்பத்திரம் எதுவும் வழங்கப்படவில்லை.
அதேப்போன்று கடந்த இரு வருடங்களாக நாடுமுழுவதும் உள்ள கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி 'காணிக்கச்சேரிகள்' நடத்தப்பட்டப்போதும் இதுவரையில் ஒரு தொழிலாளர் குடும்பத்திற்காவது காணிவழங்கப்பட்டதா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களுக்கான பல்வேறு குடியிருப்புத் திட்டங்களை அரசாங்கம் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது. அதேப்போன்று இவர்களால் கைப்பற்றப்படுகின்ற தரிசு நிலங்களையும் அரசாங்கமானது 'சுவர்ணபூமி' உரித்து என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றமையை காணலாம்.
எனவே பெருந்தோட்டங்களை மையப்படுத்தி சுமார் 513 தோட்டக்குடியிருப்புகள் உள்ளதோடு, அவை அனைத்துமே தற்காலிக குடியிருப்புகளாகவே இருக்கின்றன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் - 2ல் மதிப்புக்குரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள வீட்டு உரிமைக்கான உறுதிமொழியினை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் எமது அரசியல் தலைமைகள் உள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திதுகின்றனர் என்ற முறையிலும், அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றனர் என்ற முறையிலும், பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றார்கள் என்ற முறையிலும் தங்களுக்குள் கட்சி பேதமற்ற முறையில் ஓரணியில் திரண்டு வருகின்ற வருடத்திலாவது, வரவு-செலவு திட்டத்தில் பெருந்தோட்டக் குடியிருப்புகளை சுதந்திரமான குடியிருப்புகளாகவும், தனிநபர் உரிமையாகவும் ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், காணி உரிமையினை பெற்றுக்கொடுக்கவும், தோட்டக்குடியிருப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் கூடிய வகையில் நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்கான முன்மொழிவினை கொண்டு வருவதன் மூலம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு விடயம் குறித்த முனைப்பான செயற்பாடுகளை ஏற்படுத்தினால் தவிர இந்நிலைக்கு விமோசனமில்லை.