ஞாயிறு, 1 ஜனவரி, 2012

மலையகத்தமிழ் மாணவர்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் : பி.திகாம்பரம் எம்.பி

மலையகத் தோட்டப்பகுதி மாணவர்கள் கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி தமது எதிர்காலத்தினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
பத்தனை கிறேகிலி தோட்ட லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்டம் மற்றும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது கிறேக்கிலி தோட்டத்திலிருந்து முதன் முறையாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர் ஒருவருக்கு கற்றலுக்கான நிதியுதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான ராஜமாணிக்கம் ,பத்தனை அமைப்பாளர் லெட்சுமணன் ,கொட்டகலை அமைப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தோட்டத்தொழிலாளர்கள் தமது பிள்ளைகளைக் கல்வி கற்க வைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் எதிர்பாப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் தமது கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். கிறேக்கிலி தோட்டத்திலிருந்து தோட்டத்தொழிலாளி ஒருவரின் பிள்ளை முதன் முறையாகப் பல்கலைகக்ழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழச்சிக்குரிய விடமாகும். இவ்வாறு ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் படித்தவர்களும் பட்டதாரிகளும் உருவாக வேண்டும். அப்போது தான் எமது சமூகம் மேலும் முன்னேற்றமடையும். இதனால் மற்றவர்களால் எமது சமூகம் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். தோட்டத்தொழிலாளர் குடும்பத்தினர் எவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்பதை நான் அனுபவித்தில் உணர்ந்தவன் .அதனால் தான் நான் என்றும் மக்கள் மத்தியிலிருந்து கொண்டு மக்கள் விரும்புகின்ற வகையில் சேவையாற்றி வருகின்றேன். எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மூலமாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கிடைத்துள்ள 5 கோடி ரூபா மூலமாகவும் தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களைப் பாரபட்சமின்றி முன்னெடுத்துள்ளேன். டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் 12 இலட்சம் ரூபா பெறுமதியில் சிறுவர் முன்பள்ளி ஒன்றை அமைத்துள்ளேன். இதே வேளை மலையகத்தோட்டப்பகுதி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த நிலையில் இன்று தோட்டத்தொழிலாளர்கள் தோட்டக்கம்பனிகளின் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சில தோட்ட முகாமையாளர்கள் தோட்டத்தொழிலாளர்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.அண்மையில் அட்டன் வெலிஓயா தோட்டத்தொழிலாளர்கள் எதிர் நோக்கிய வேலைப்பளு அதிகரிப்புத் தொடர்பான பிரச்சினையைத் தொழிலாளர் தேசிய சங்கம் முன்னின்று தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைத்தமையை இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன். தோட்டங்களில் வேலைப்பளுவை அதிகரிப்பதற்கான எந்தவிதமான தன்னிச்சை அதிகாரமும் தோட்ட நிருவாகங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்து தொழிலாளர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.