செவ்வாய், 1 ஜூன், 2010

மலையக ரயில் சேவைகள் விரைவில் சீர் : அமைச்சர் குமாரவெல்கம

மலையக ரயில் சேவைகளைச் சீர்செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார்.
மலையக ரயில் சேவைகளின் காலதாமதம் மற்றும் ரயில் பாதைகளின் தற்போதைய நிலைமைத்தொடர்பில் ரயில் பயணிகள் தெரிவித்த புகாரினைத் தொடர்ந்து அந்தப் புகார்கள் தொடர்பாக ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அண்மையில் நானுஓயா,அட்டன் ,றொசல்ல ஆகிய ரயில் நிலையங்களுக்கும் இந்தப்பகுதிகளில் ரயில்களிலும் பயணித்து அவதானிப்பில் ஈடுபட்டார். இதன் பின்பு அவர் கருத்துத்தெரிவிக்கையில் :
மலையக ரயில் சேவைகள் பல்வேறு காரணங்களால் காலதாமதிப்பதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.அத்தடன் மலையக ரயில் பாதைகள் பல்வேறு பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளன.இவற்றினை விரைவில் சீர் செய்து மலையக ரயில் போக்குவரத்தினை உரிய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

பொகவந்தலாவையிலிருந்து கொழும்பு சென்ற மனைவி குறித்துத் தகவலில்லை : கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்புக்குச்சென்ற தனது மனைவியைப்பற்றி இதுவரை எந்தவிதமான
தகவலும் கிடைக்கவில்லையென்று கணவர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.
பொகவந்தலாவை எல்டொப்ஸ் தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான 32
வயதையுடைய சிவனுதனலெட்சுமி கடந்த 24 ஆம் திகதி கொழும்புக்குச்சென்றுள்ளார்.
இதன் பின்பு இவர் கடந்த 29 ஆம் திகதி தனது கணவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும் அதன் பின்பு தொலைப்பேசித்தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை எனவும் இந்தப்பெண்ணின் கணவரான ராமையா யோகேஸ்வரன்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.