வெள்ளி, 3 செப்டம்பர், 2010

பதுளையில் இரத்த தான நிகழ்வு









அமரர் சௌமியமூர்த்தித் தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு பதுளை மாவட்ட இ.தொ.கா.வின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.இந்த நிகழ்வில் இ.தொ.கா.வின் பதுளை மாவட்ட இளைஞரணி அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்

இ.தொ.கா.வின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமா அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டம் ? தொ.தே.சங்கத்தின் முக்கியஸ்தர் கேள்வி

கொட்டகலை மற்றும் பத்தனை பிரதேச தோட்டங்களில் அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டங்கள் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுமென்று பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனைப் பிரதேச கிளைச்செயலாளர் என்.ஆர்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் புதிய வீடமைப்புத்திட்டங்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான வீடமைப்புத்திட்டங்கள் இ.தொ.கா.வின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுமென்று தோட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏனைய தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கொட்டகலை ரொசிட்டாத்தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாடிவீட்டுத்திட்டத்தில் இந்தத்தோட்டத்தில் வீடில்லாதவர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை.இவ்விடயங்கள் குறித்து அரசாங்கம் உரிய நடவடி;ககை எடுக்க வேண்டும்.

காச்சாமலைத்தோட்ட நிருவாகத்தின் கெடுபிடிகள் குறித்து முரளிரகுநாதன் விசனம்


கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட காச்சாமலைத்தோட்ட நிருவாகம் தொழிலாளர்கள் தொடர்பில் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
காச்சாமலைத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது வீட்டுத்தோட்டத்தில் வாழைமரம் ஒன்றை நாட்டியமைத்தொடர்ந்து அதே தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரால் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் தோட்டத்திலுள்ள மரக்கன்றொன்றினை வெட்டியதாகத் தெரிவித்து பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் தோட்ட உதவி அதிகாரி முறைப்பாடு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிஸார் குறிப்பிடத்தொழிலாளி மீது சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸாருடன் நான் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினேன்.இந்த நிலையில் குறிப்பிடத்தோட்டத்தொழிலாளிக்கு தோட்டத்தில் வேலை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் மறுப்புத்தெரிவித்துள்ளது. இவ்வாறு தோட்டத்தொழிலாளியின் மீது தோட்ட நிருவாகம் மேற்கொள்கின்ற கெடுபடிகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது இவ்விடயம் குறித்து தொழிற்திணைக்களத்திடம் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளேன்.

பொகவந்தலாவை தோட்ட மக்களுக்குத் தபால் சேவை சீரில்லை

பொகவந்தலாவை தோட்ட மக்களுக்கு உரியவகையில் தபால் விநியோகம் இடம் பெறாத காரணத்தினால் இந்தத்தோட்ட மக்கள் தமக்குரிய கடிதங்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொகவந்தலாவைப்பிரதேச தோட்டங்கள் சிலவற்றில் மாத்திரமே தபால் ஊழியர்களால் நேரடியாக தபால் விநியோகம் இடம் பெறுகின்றது.எனினும் சிலத்தோட்டங்களில் தோட்ட நிருவாகத்தினால் நியமிக்கப்படுகின்ற ஊழியர்கள் மூலமாகவே தபால் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.இந்த நிலையில் பொகவந்தலாவைத் தோட்டத்தில் இவ்வாறு ஒரு ஊழியர் கடந்த இரண்டு வருடங்களாக நியமிக்கப்படாததால் இந்தத்தோட்ட மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் உரியநேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து தபால் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொகவந்தலாவைத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தில் மருத்துவ சேவைகள்சீரில்லை : தோட்ட மக்கள் புகார்













சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தைச்சேர்ந்த நான்கு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்களுக்கான வைத்தியசேவைகள் உரிய வகையில் கிடைப்பதில்லையென தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பபி.திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ட்ரஸ்பி தோட்டத்திலுள்ள மருந்தகத்தின் மூலமாக மாதத்தில் 15 நாட்களுக்கு மாத்திரமே தோட்ட மருத்துவ உத்தியோகஸ்தரின் சேவை கிடைப்பதாகவும் முக்கிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் தோட்ட மக்கள் மேலும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அட்டன் பிராந்திய நிறுவனத்துடன் தான் தொடர்பு கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.