திங்கள், 6 செப்டம்பர், 2010

நுவரெலியா தோட்டப்பகுதி மக்களின் நலன் கருதி அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு :மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தித்திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை
சம்பந்தப்பட்டவர்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு நாளை 7 ஆம் திகதி முற்பகல் 11.௩0 மணியளவில் கொட்டகலையில் இடம் பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கியஸ்தர்களும் தோட்டக் கமிட்டித்தலைவர்களும் தோட்டத்தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். பத்தனை பொரஸ்கிரீக் , குயின்ஸ்பெரி வெஸ்ட் ,நானுஓயா டெஸ்போர்ட் லோன் டிவிசன் ,கிளாஸ்கோ மேற்பிரிவு ,தம்பத்தலாவ , தலவாக்கலை மட்டக்கெல ,கிரேட்வெஸ்டன் லுசா , கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு ,எதன்சைட் மேற்பிரிவு ,லிந்துலை தங்ககெல ,சலாங்கந்த ,நுவரெலியா வெஸ்டோடா ,கந்தப்பளை டிவிசன் ஆகிய தோட்டங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டமொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமைக்காலை 10 மணிக்கு அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இடம் பெறவுள்ளதாக இலங்கைத்திறந்த பல்கலைகழகத்தின் சமூக கற்கை துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். அட்டன் நகரின் மல்லியப்பூ பகுதியில் இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய கற்கை நிலையத்துக்கான நிரந்தர கட்டிடமொன்றினை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனினும் பல்வேறு காரணங்களால் இந்த நிலத்தில் கட்டிடமொன்றினை அமைக்கப்பட முடியாத நிலைமை கடந்த பல வருடங்களாக ஏற்பட்டது.இந்த நிலையில் இந்த நிலத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களை அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஆர்வமுள்ளவர்களுடன் கலந்துரையாடும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் : முரளிரகுநாதன் தெரிவிப்பு

கண்டி மாவட்டத்தலுள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு உட்பட்ட தோட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலுள்ள தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து ஊழியர் சேமலாபநிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி போன்றன அறவிடப்படுகின்ற போதும் இவை உரிய நிதி நிறுவனங்களில் வைப்புச்செய்யப்படுவதில்லையென பாதிக்கப்பட்டத் தோட்டத்தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிதியினைப்பெற்றத்தருமாறு இப்பகுதித்தோட்டத்தொழிலாளர்கள் கடந்த காலங்களில் பல்வேறு கவனயீர்ப்புப்போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.எனினும் இதுவரை தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவில்லை.இவ்வாறானதொரு நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் மேலம் தெரிவித்தார்.