சனி, 1 ஜனவரி, 2011

அமரர் பெ.சந்திரசேகரனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு



மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் ஓராண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மலையகத்தின் பலதோட்டங்களில் நினைவு தினக்கூட்டங்கள் இடம் பெற்றன.இதற்கேற்ப கொட்டகலை டிறேட்டன் தோட்டத்தில் இடம் பெற்ற நினைவாஞ்சலிக்கூட்டத்தில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் ,மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் விஸ்வநாதன் உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பலர் பங்குபற்றியிருப்பதைப்படங்களில் காணலாம்.

நுவரெலியாவில் தீ விபத்து : 23 குடும்பங்கள் பாதிப்பு



நுவரெலியா கந்தப்பளை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அமைந்துள்ள லயன் வீடுகள் சிலவற்றில் நேற்று 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீவிபத்து சம்பவமொன்றில் 22 வீடுகள் முற்றாக எரிந்து சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் 23 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 108 பேர் வரையில் இந்த சம்பவத்தால் தமது உடமைகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் கந்தப்பளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளானோர்க்குத் தேவையான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி..பி.ஜி . குமாரசிறி அறிவித்துள்ளார்.சம்பவம் இடம் பெற்ற இடத்துக்குச்சென்ற மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன் சேதவிபரங்களை ஆராய்ந்து அவைத்தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். தீ விபத்து இடம் பெற்ற இடத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை இன்று நேரிடையாக விஜயம் செய்து சேதவிபரங்கள் குறித்து தகவல்களைத்திரட்டிச் சென்றுள்ளார்.