மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 23 டிசம்பர், 2011
தோட்ட எம்புலன்ஸில் டீசலும் ஏற்றப்படுகின்றது : நோயாளிகள் திண்டாட்டம்
தோட்டத்தொழிலாளர்களின் நலன் கருதி தோட்ட நிருவாகங்களுக்கு வழங்கப்படுகின்ற வளங்கள் பல தோட்ட நிருவாகங்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட மனதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக தோட்டப்பகுதி மக்களின் சுகாதார வைத்திய நலன் கருதி வழங்கப்படுகின்ற எம்புலன்ஸ் வாகனங்கள் தோட்டப்பகுதி நோயாளிகளை காவிச்செல்வதை விட தோட்ட நிருவாகிகளின் தனிப்பட்ட தேவைகளுக்குப்பயன் படுத்தப்பட்டு வருவதாக தோட்டத்தொழிலாளர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இதற்கான ஆதாரங்களை இவர்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற போதும் அவை அதிகார தரப்பினர் முன்னிலையில் எடுபடுவதில்லை. எனினும் கடந்த 22 திகதி அட்டன் நகர மத்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டவளை பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட ரொசலை விக்டன் தோட்ட எம்புலன்ஸ் வாகனத்தில் பீப்பாய்கள் மூலம் டிசல் மற்றும் பெற்றோல் நிரப்பப்படுவதை பார்த்த போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நோயாளிகளை மிகவும் அவதானமாகவும் சுகாதாரத்துடனும் காவிச்செல்லக்கூடிய எம்புலன்ஸ் வாகனத்தினுள் இரண்டு பீப்பாய்கள் வைக்கப்பட்டு அதனுள் எரிபொருள் நிலையத்தின் டீசல் நிரப்பு குழாய் மூலமாக டீசல் நிரப்பப்பட்டது.அத்துடன் சிறிய கொல்கலன்களில் பெற்றோல் நிரப்பப்பட்டு அந்தக்கொள்கலன்களும் அந்த எம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்தக்காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்த போது கூடியிருந்த மக்களுக்கு அப்போதுதான் நிலைமை புரிந்தது.இதுவரைக்காலமும் இவ்வாறு எத்தனை தோட்டங்களில் எம்புலன்ஸ் வாகனங்களில் எரிபொருள் மற்றும் சிலின்டர்களும் ,ஏனைய பொருட்களும் ஏற்றப்பட்டிப்பதை அவதானித்திருப்போம். ஆனால் எங்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.ஆனால் தற்போதைய இந்த விடயம் ஊடகங்களின் மூலம் வெளிவரும் என்று கூடியிருந்த மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் டீசல் நிரப்பப்பட்ட மணத்துடன் அந்த எம்புலன்ஸ் வாகனத்தில் அவசர நோயாளிகளைக்காவிச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் போது அந்த நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் சுகாதார நலனோம்பு விடயங்களைப் பொறுப்பெடுத்துள்ள பெருந்தோட்ட மனித வள நிறுவனத்தின் ஆலோசனைகள் தோட்ட நிருவாகங்களினால் எவ்விதம் பின்பற்றப்படுகின்றன.இவ்வாறான நடவடிக்கைளால் தெரிலாளர்களின் நலன்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்துப் பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் இந்த ஆதரத்துடனான தகவலைக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)