தோட்டத்தொழிலாளர் சமூக விடிவிற்கு அரசியல் மற்றும் தொழிற்ச பலம் இன்றியமையாததாகும்;:
திகாம்பரம் எம்.பி. கருத்து
அரசியல் பலத்துடன் தொழிற்சங்க பலமுமிருந்தால் தான் தோட்டத்தொழிலாளர் சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :
மலையகத்தில் செயற்படுகின்ற முக்கிய தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்திற்குத் தற்போது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.இந்தப்பிரதிநிதித்துவத்தின் மூலம் இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அரசியலமைப்பு மாற்றம் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக நாம் பல அமைப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.இவ்விடயம் தொடர்பாக ஆக்கப்பூர்வமாக செயற்படுகின்ற அமைப்புக்களுக்கு நாம் கரிசனையுடன் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். மலையகத்தமிழ் மக்கள் தொடர்பாக பல்வேறு வெளிநாட்டுத்தூதரங்கள் எம்முடன் தொடர்பு கொண்டு எமது கருத்துக்களைக் கேட்டறிந்து வருகின்றன.இதன் போது நாம் மலையகத்தமிழ் மக்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளோம். நான் அரசாங்கத்துடன் இணைவேனா அமைச்சுப்பதவியைப்பொறுப்பேடுப்பேனா என்பது குறித்துப் பலர் அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்.அறுதிப்பெருபான்மை பலமுள்ள ஒரு அரசாங்கமிருக்கும் போது இது சாத்தியமாகுமா என்பது குறித்துப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். எனினும் எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக நான் ஒரு போதும் தீர்மானம் எடுத்தது கிடையாது. மலையகத்தோட்டப்பகுதிகளின் அபிவிருத்திக்கும் எமது சமூகத்தின் அரசியல் இருப்பைத்தக்க வைத்துக்கொள்வதற்கும் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் முக்கியமாகும். அதனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் விடயங்கள் தொடர்பாக எமது ஆதரவாளர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் .அவ்விடயம் தொடர்பாக தமக்குள் கலந்துரையாட வேண்டும்.அதன் மூலம் அரசியல் ரீதியாக தெளிவு பெறவேண்டும்.
கடந்தப்பொதுத்தேர்தலில் என்னுடன் போட்டியிட்ட எமது பிரதித்தலைவர் உதயகுமார் வெற்றிப்பெற்றிருந்தால் எமது அரசியல் பலம் மேலும் அதிகரி;க்கப்பட்டிருக்கும். எனினும் அந்த வாய்ப்பினை எமது ஆதரவாளர்கள் மயிரிழையில் தவற விட்டுவிட்டார்கள்.நுவரெலியா மாவட்டத்தைச்சேர்ந்த மக்கள் ஒரு சிலருக்கு வாக்களித்துள்ள போதும் அவர்களால் உரிய பயன் கிடைக்குமா என்பதைப்பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த காலத்தினைப்பொறுத்த வரையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகள் எமது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் நாம் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களால் தான் இன்று தோட்டத்தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்டச்சம்பளத்தினையாவது பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டது.அவ்வாறு நாம் போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் மிகமோசமாக கையாளப்பட்டிருக்கும் என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில் தொடர்ந்து எமது அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகள் மக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும். இவ்வாறானதொரு நிலையில் தோட்டக்கம்பனிகள் தற்போது கூட்டொப்பந்தத்தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக செயற்படுவதால் தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாதிப்படைந்து வருகின்றனர்.இவர்களின் உழைப்பு பலவழிகளில் சுரண்டப்படுகின்றன.இவற்றினைத்தட்டிக்கேட்க வேண்டுமானால் தோட்ட நிருவாகங்களுக்கு உரிய அழுத்தங்களைக்கொடுக்க வேண்டுமானால் தொழிற்சங்கரீதியான பலத்தின் மூலமாகவே முடியும்.
அதனால் தொழிலாளர் தேசிய சங்கத்தினைத்தொழிற்சங்க ரீதியாக பலப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.
மலையகத்தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இருப்பைக்கருத்திற்கொண்டு மலையகத்தமிழ் அரசியல் அமைப்புக்கள் செயற்பட வேண்டும் : கணபதி கனகராஜ்
மலையகத்தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இருப்பை கவனத்தில் கொண்டு மலைய அரசியல் அமைப்புக்கள் மிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் :
தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பில் உள்ள தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்திவருகின்றது.நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மலையகத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு பிரதிபலிக்கின்றது. சில மாவட்டங்களில் எமது பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருப்பதற்கு எமது மக்களிடம் நாம் அரசியல் தெளிவை ஏற்படுத்தாததும், வாக்காளர் இடாப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நீக்கப்பட்டு இருப்பதுமே காரணமாகும். தற்போதைய நிலையில் அரசாங்கம் ஏற்படுத்தப்போகின்ற தேர்தல் முறைமாற்றம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அதன் மூலம் மலையக மக்கள் அரசியல் பிரதிநிதித்துவ இழப்பை எதிர்நோக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது.இந்த நிலையில் எமது அரசியல் எதிர்காலத்தை சரியாக நிர்ணயித்துக்கொள்வதற்கு மலையக
அரசியல் அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் சனத்தொகையில் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை கோருகின்ற உரிமை மலையக மக்களுக்கு இருக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு எமது அரசியல் நகர்வுகள் அமையவேண்டும். இவ்விடயத்தில் எம்மிடையே எவ்விதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்பதே இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடாகும். தேர்தல் முறை மாற்றப்பட்டால் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு சபைக்குச் சிபார்சு செய்வதற்கு இந்த விடயத்துடன் நன்கு பரிட்சயமுள்ளவர்களைக் கொண்ட குழு செயற்பட்டு வருகின்றது. இக்குழுவிற்கு நாமும் பல்வேறு ஆலேசனைகளை வழங்கியிருக்கிறோம். இக்குழுவினர் மலையகத்தின் பல்வேறு அமைப்புக்களையும் சந்தித்து ஆலேசனைகளை பெற்று வருகின்றனர். இவர்களால் தயாரிக்கப்பட்டுவருகின்ற அறிக்கையை அனைத்து மலையக அமைப்புக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக அரசியல் அமைப்பு சபைக்கு சமர்பித்தால் அது மிகவம் பலம்வாய்ந்த அரசியல் கோரிக்கையாக அமையுமென எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் ஏற்படுத்த உத்தேசித்துள்ள தேர்தல்முறை மாற்றத்தால்; வடக்கு கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அதேபோல இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்க இந்திய மத்திய அரசாங்கமும் பங்களிக்க வேண்டும்