வியாழன், 23 ஏப்ரல், 2015

93 ரூபாவுக்கு வழங்க வேண்டிய ஒரு கிலோ கோதுமை மாவை 105 ரூபாவுக்கு வழங்கும் பொகவந்தலாவை தோட்ட நிருவாகம் : மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனிடம் தொழிலாளர்கள் முறைப்பாடு

தலைப்பைச் சேருங்கள்


பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை மற்றும் டின்சின் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கோதுமை மா அதிக விலையில் வழங்கப்படுகின்றமைத் தொடர்பில் தொழிலாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பொகவந்தலாவை மற்றும் டின்சின் தோட்டங்களில் 1250 தொழிலாளர்கள் வாழுகின்றனர். இவர்களுக்கு மாதாந்தம் 3300 கிலோகிராம் கோதுமை மா தோட்ட நிருவாகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது. இந்த கோதுமை மாவுக்கான கட்டணம் தொழிலாளர்களின் மாதாந்த வேதனத்தில் அறவிடப்படுகின்றது.
இந்த நிலையில் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மா  93 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் தொழிலாளர்களுக்கு  ஒரு கிலோ கோதுமை மா 105ரூபாவுக்கு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும் கோதுமை மாவை நிறுவை செய்யப்படும் தராசு நியமத்தன்மை அற்றதெனவும் இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினால்  கடிதம் அனுப்பப் பட்டுள்ள போதும் பொகவந்தலாவை தோட்ட நிருவாகம் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நுவரெலியா மாவட்ட விலைக்கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை: