சிறப்புக்கட்டுரைகள்

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 98 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி

இலங்கையில் சற்றேறத்தாழ 50 வருட காலமாக குடியுரிமை பெறுவதற்கும் கல்வி பெறுவதற்கும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்ட பெருந்தோட்ட மக்கட் சமூகம் இன்று இந்நாட்டிலுள்ள பிற சமூகங்களுக்கு இணையாக முன்னேற்றங் காண முனைப்புடன் சிந்தித்து, செயற்படுகின்ற வல்லமையை குறிப்பிடத்தக்களவு பெற்றுள்ளது. பெருந்தொகையான பெருந்தோட்ட தமிழ் மக்களின் புறவுலகு வாழ்க்கைத் தரிசனங்களுக்கு குடியுரிமையும் கல்வியும் இரட்டை கடவுச்சீட்டுகளாக வேண்டப்பட்ட காலம் இன்று இல்லை. கல்வியெனும் ஒற்றை கடவுச்சீட்டொன்றையே இது இன்று வேண்டி நிற்கின்றது. இந்த சமூக நிலைமாற்றத்திற்கு தலைமைதாங்கிய பெருமகன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். 1939களில் இலங்கை இந்திய காங்கிரசாகவும் 1951களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசாகவும் அறியப்பட்ட தொழிற்சங்கக் கட்டமைப்புக்கு மட்டுமல்லாமல் பெருந்தோட்ட தமிழ் மக்கட் சமூகத்திற்கும் தலைமைதாங்கிய பெருமகன் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். இவர் தனது 87ஆவது பிறந்த நாளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆந்திகதியன்று பூர்த்திசெய்த தருணத்தில் இலங்கை அமைச்சரவையின் அதிமூத்த உறுப்பினராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் பின்தங்கிய மக்கட் சமூகமொன்றுக்கு நிலையானதும் உறுதியானதுமான தலைமைத்துவத்தை வழங்கிய வல்லமை கொண்ட பெருமைக்குரியவாகவும் திகழ்ந்தார்.

1978 இலிருந்து தொடர்ச்சியாக 21 வருடங்களாக இலங்கையின் சனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரது அமைச்சரவைகளின் உறுப்பினராக செயற்பட்டு முழு நாட்டு மக்களுக்கும் தனது பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கும் சேவையாற்றியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். 1947ஆம் ஆண்டு, இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், அப்போதைய பாராளுமன்றத்தின் தெரிவுசெய்யப்பட்ட 95 அங்கத்தவர்களிலும் 6 நியமன அங்கத்தவர்களிலும் ஒருவராவார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் தட்டிப்பறித்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் சர்வன வாக்குரிமை மற்றும் குடியுரிமை சட்டமூலங்களுக்கு எதிராக மக்களை ஓரணி திரட்டி, 1948 இற்கும் 1949 இற்கும் இடைப்பட்டதாக 18 மாதங்கள் வரை நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான் ஆவார். இந்த சட்டமூலங்களால் சுதந்திர இலங்கையில் 1இ071இ000 ஆக இருந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கட் தொகை, தாயகம் மீள வேண்டிய நிர்ப்பந்தத்தினால் படிப்படியாக குறைவடையவும் தொடங்கியது. 1964இல் செய்து கொள்ளப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமானது இலங்கையின் குடியுரிமை சட்டமூலங்களால் நாடற்றவர்களாக்கப்பட்ட இந்திய வம்சவளி தமிழ் மக்களை 7 இற்கு 4 என்ற விகிதத்தால் முறையே இந்தியா செல்லவும் இலங்கையில் வாழவும் அனுமதியளித்தது. இதனால் ஏறத்தாழ 975இ000 பேராக இருந்த நாடற்றவர்களுள் 525இ000 பேர் இந்தியா செல்ல வேண்டிய நிலையேற்பட்டதுடன் 300இ000 பேர் இலங்கைக் குடியுரிமைப் பெறவும் இன்னும் 150இ000 பேர் இலங்கையும் இந்தியாவும் இல்லாமல் அனாதரவாகக் கைவிடப்பட்டவர்களுமாகினர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களினதும் அவர் தலைமைதாங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தொடர்ந்த முயற்சிகளினாலும் இன்னும் பல போராட்டங்களினாலும் குடியுரிமைப் பிரச்சினைக்கு 1987இல் முடிவு காணப்பட்டது. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்தினால் கட்டியnழுப்பப்பட்ட ஒன்றிணைந்த மக்கள் ஒற்றுமையினாலேயே இது சாத்தியமாகியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலைமையில் இருந்து கொண்டு தோட்டங்களில் அல்லலுற்றுக் கொண்டிருந்த பெருந்தோட்ட தமிழ் மக்களின் முழுமையான சமூக அபிவிருத்தியின்பால் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காத்திரமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். கல்விக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் பெறுமதிமிக்கதாகும். 1948களிலேயே தனது கல்வி முன்னேற்றப் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாக ஒரு சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்த தொண்டமான் அவர்கள், பெருந்தோட்டப் பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பிற்கும் அப்பாலும் கல்வி பெற புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு அப்போதைய இந்தியத் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆரம்பிக்கப்பட்ட நம்பிக்கை நிதியமானது இன்றளவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். மேலும், 1977இல் பெருந்தோட்ட தமிழ் சமூகத்தின் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொண்டமான் அவர்களின் வற்புறுத்தலினால், சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ரூபா 25 மில்லியன் பெறக்கூடியதாயிற்று. இந்நிதி முழுவதும் தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காகவே அவர் ஒதுக்கியிருந்தார். பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவிய கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக பெருந்தோட்ட சமூகத்திலிருந்து கற்ற இளைஞர், யுவதிகள்  ஆசிரியர்களாக உருவாவதற்கு அவர் முன்னின்று உழைத்தார். இக்காலப்பகுதியில் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக இருந்த தொண்டமான் அவர்கள் கல்வித்துறையில் கிரமமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். 1870களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தொண்டமானின் தந்தையார் மீண்டும் நாடு திரும்ப 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் தம்மையொத்த சிறுவர்கள் பாடசாலைகளிலே கல்வி பயில தானொருவன் மட்டும் பாடசாலைக்கு செல்லாமல் இருக்க வேண்டியதாயிற்று என்றும் இருந்தாலும் தாமாகவே பாடசாலை அனுமதி பெற்று பாடசாலைக்கு செல்லத் தொடங்கியதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு இந்நிலைமை ஏற்படக்கூடாதென தான் மிகவும் கரிசனையாக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும், பெருந்தோட்டப் பிள்ளைகள் கல்வி பெறுவதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் இன்று நாட்டிலுள்ள ஏறத்தாழ 833 பெருந்தோட்டப் பாடசாலைகளில் சற்றேறக்குறைய அரைவாசியானவை சுவீடனின் சீடா நிதியுதவியுடனான கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் அபிவிருத்தி செய்யப்படுவதற்குக் காரணமாகின.

பெருந்தோட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளிடையே பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது, தொழில் கல்வியையும் தொழினுட்பக் கல்வியையும் மேம்படுத்தும் பொருட்டு ஹட்டனில் நோர்வே அரச நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமும் கலாசார, மரபுவழி கலையாக்கங்களை தொடர்ந்தும் வளர்த்து, பேணிவர இறம்பொடையில் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமான் கலாசார நிலையமும் அவை ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை ஈடேற்றிக் கொண்டிருக்கின்றன.

பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் வழங்கிய அரசியல் தலைமைத்துவமும் தொழிற்சங்க தலைமைத்துவமும் சமூகத் தலைமைத்துவமும் பெருந்தோட்ட தமிழ் மக்கள் இன்று உள்ளுர் ஆட்சி மன்றங்களிலும் மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் தமது பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வழிசமைத்துள்ளது. வாக்குரிமை பறிக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டு, ஆரம்பகல்வி பெறுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்த ஒரு சமூகம் இன்று அரசியலில் பங்குபற்றவும் உயர்கல்வி பெறவும் சந்தர்ப்பம் கிட்டப் பெற்றுள்ளதாகவுள்ளது. இதனை நாம் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு 50 ஆண்டு காலமாக போராட வேண்டியிருந்தது. இந்த வாழ்வுரிமைப் போராட்டங்களுக்கெல்லாம் தலைமைதாங்கி, சமூகத்தை வழிநடத்தி, பெருந்தோட்ட தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார அபிலாசைகளை அடைந்து கொள்ள தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெருந்தகை சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கு இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் வரலாற்றிலே என்றுமே ஒரு பிரதான இடம் உள்ளது.