நுவரெலியா மாவட்டம் டிக்கோயா கிளங்கன் மாவட்டவைத்தியசாலையைத் தரமுயர்த்துவதற்கும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சில உதவிகளையும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா உறுதியளித்துள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.
மத்திய மாகாணசபையின் உறுப்பினர் முரளிரகுநாதனின் அழைப்புக்கேற்ப கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை ,மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை என்பனவற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயம் தொடர்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :
டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கண்டி உதவி இந்திய தூதுவர் இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளைக்கேட்டறிந்து கொண்டார். இதன் பின்பு இந்த வைத்தியசாலையை ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தும் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த தரமுயர்த்தும் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் இலங்கை ரூபாவில் 600 மில்லியனைச் செலவிடவுள்ளதாகவும் கண்டி உதவி இந்திய தூதுவர் தெரிவித்தார்.அத்துடன் தோட்டப்பகுதி மக்களின் அவசர மருத்து சேவைகளுக்காக 5 எம்புலன்ஸ் வாகனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் கல்வி மற்றும் சுகாதார தேவைகள் குறித்து இந்திய அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் கண்டி உதவி இந்திய தூதுவர் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள சில தோட்டங்களுக்கும் பாடசாலைகள் சிலவற்றுக்கும் எனது அழைப்புக்கேற்ப விஜயம் செய்தமைக் குறிப்பிடத்தக்கது.இதே வேளை இந்த விஜயத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சிலவும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்கள் சிலவும் விநியோகிக்ப்பட்டன என்று தெரிவித்தார்.