மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 13 ஜூலை, 2010
கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு விசேட போக்குவரத்துச்சேவைகள்
நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமான கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு; விசேட பஸ் மற்றும் ரயில் இணைந்த சேவைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்களின் நலன் கருதி, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை இச்சேவைகள் நடத்தப்படுமென ரயில்வே வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார் நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஹப்புத்தளை, பண்டாரவளை, மாத்தறை ஆகிய நகரங்கள் வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் புனித நகரம்வரை பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.இதே மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லவிருக்கின்ற பக்தர்களின் நலன் கருதி மலையக நகரங்களிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்துமாறு மலையக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மாகாணத்தில் மர நடுகை
மத்திய மாகாணத்தில் மர நடுகைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு வன இலாகாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கேற்ப மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, நுவரெலியா , மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பிரதேசங்களில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த மாவட்டங்களிலுள்ள காடுகள் அழிவடைந்து வருவதைத்தடுப்பதற்காகவும் சுற்றாடற் சமநிலையைப் பேணுவதற்காகவும்; காடுகள் அழிவடைவதால் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத்தடுப்பதற்காவும் இந்த மர நடுகைத்திட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக வன இலாகாத் திணைக்களம் சுட்டிக் காட்டுகிறது.
அட்டன் - டிக்கோயா நகரசபையின் உள்ளுராட்சி வாரம்
உள்ளுராட்சி வாரத்தின் கல்வி ,நூலக அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்தினத்தினை முன்னிட்டு இன்று அட்டன் - டிக்கோயா நகரசபையின் மூலம் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. இதற்கேற்ப அட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நூலகத்தின் பயன்பாடு குறித்த செலமர்வுகளும் டிக்கோயா தரவளை மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினமும் பரிசளிப்பு விழாவும் 15 ஆம் திகதி
அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 15 ஆம் திகதி அட்டன் டி.கே.டப்ளியூ .கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக யாழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.டி.கலாமணியும் சிறப்பு அதிதியாக அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவியும் மன்னார் மாவட்டத்தின் நீதிவானுமாகிய திருமதி.கே.ஜீவராணியும் மற்றும் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர.எம்.ரெங்கராஜும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக்கல்லூரியின் 120 ஆவது நிறுவகர் தினம் கடந்த ஜீன் மாதம் 29 ஆம் திகதி கொண்டாடப்படவிருந்தது எனினும் இந்தக்கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் திடீர் மரணமானதைத்தொடர்ந்து இந்தக்கல்லூரித்தினம் 15 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)