வியாழன், 28 அக்டோபர், 2010

ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணத்தமிழ் மாணவர்களின் பெறுபேறு மட்டம் உயர்வு : அனுஷியா சிவராஜா

கடந்த வருடங்களை விட இம்முறை ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணத் தமிழ் பாடசாலை மாணவர்களின் பெறுபேறு உயர்வு நிலையை அடைந்துள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.
இம்முறை ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா ,மாத்தளை ,கண்டி ஆகிய மாவட்டங்களில் சித்திப்பெற்ற தமிழ் மொழிமூல மாணவர்களுக்குப் பதக்கம் அணிவித்து பாராட்டும் விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இன்று 28 ஆம் திகதி இடம் பெற்ற இந்த விழாவில் மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர். இந்த விழாவில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்காரம் பொன்னையா ,ராம் ,மத்திய மாகாணத்தமிழ்க் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ,உதவிச்செயலாளர் திருமதி சத்தியேந்திரா ,அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் ,நுவரெலியா கல்வி வலயத்தின் மேலதிகக்கல்விப்பணிப்பாளர் இராஜசேகர் ,சீடா தகவல் நிலையப்பொறுப்பாளர் விஜயானந்தன் உட்பட கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
தேசிய மட்டப்பரீட்சை ஒன்றில் மலையகத்தமிழ் பாடசாலை மாணவர்களும் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றமையையிட்டு நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.கடந்த வருடங்களைவிட மத்திய மாகாணத்திலுள்ள நுவரெலியா ,கண்டி ,மாத்தளை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் மாணவர்கள் இந்த ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளின்; அடிப்படையில் கணிசமானோர் சித்திப்பெற்றுள்ள அதே வேளை 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மத்திய மாகாணத்தில் ஆரம்பக்கல்வி வளர்ச்சியைக் காட்டுகின்றது.இதற்காக பாடுபடுகிக்னற கல்வி அதிகாரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குளுக்கு எனது வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒரு காலத்தில் எமது பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தை தோட்டக்காட்டான் ,பட்டிக்காட்டான் ,படிப்பறிவில்லாதவன் என்றெல்லாம் இழிவு படுத்தினார்கள். ஆனால் இன்று எமது சமூகம் ஏனைய சமூகத்துக்கு சளைத்தவர்களில்லை என்பதை பறைசாற்றி வருகின்றது. 1979 ஆம் ஆண்டு முதல் எமது பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாரளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்த காரணத்தினால் தான் எமது மலையகத்தமிழ்ச் சமூகத்துக்கு இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் சங்கமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.அன்று முதல் எமது சமூகம் படிப்படியாக முன்னேறி வருகின்றமையை யாராலும் மறுக்க முடியாது.இன்று எமது அரசியல் பலத்தினால் இந்த மலைகத்தமிழ்ச் சமூகத்திற்கு எவ்வளவோ வளங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.
அதனொரு வெளிப்பாடாகவே இன்று கல்வித்துறையில் எம்மவர்கள் ஓரளவு சாதனைப்படைத்துக்கொண்டும் பல்வேறு துறைகளில் தடம் பதித்துக்கொண்டும் வருகின்றனர்.இவை அனைத்தும் ஒரு பின்தங்கிய சமூகம் என்ற அடிப்படையில் நோக்கும் போது சடுதியாக முன்னேறி வருகின்றோம்.இந்த நிலையில் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களை பாராட்டுவதன் மூலமாக அவர்கள் தொடர்ந்து கல்வியின் பால் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் ஏனைய மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துவதற்குமாகவே இந்தப் பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளோம்.இதே போல க.பொ.த. சாதாரணதரப்பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை என்பனவற்றிலும் எமது மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் .இதற்கு பெற்றோரின் பங்களிப்பும் இன்றியமையாதது