வெள்ளி, 14 மே, 2010

பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகள் வீணடிக்கப்படுவதை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்புப்போராட்டம்




தம்மால் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்தினை உரிய வகையில் அரைத்து தமக்குரிய வருமானத்தினை உறுதிப்படுத்தாத தோட்ட நிருவாகத்திற்கெதிராக லெதண்டி ,காபெக்ஸ் ,மால்புரோ,புரோடக் ஆகிய தோட்டங்களைச்சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் நேற்று 14 ஆம் திகதி மாலை அட்டன் - நோர்வூட் பிரதான பாதையில் வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கூடி கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்தத்தோட்டங்களிலுள்ள இரண்டு தேயிலைத்தொழிற்சாலைகள் கடந்த பல வருடங்களாக மூடப்பட்டுள்ளதால் இந்தத்தோட்டங்களில் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகளை அரைப்பதற்காக வனராஜா ,நோர்வூட் ,கெம்பியன் ,கொட்டியாக்கலை ,பொகவந்தலாவை ,பெற்றசோ ,பொகவான போன்ற தோட்டங்களிலுள்ள தேயிலைத்தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு மாற்றுத் தேயிலைத்தொழிற்சாலைகளுக்கு தேயிலைக்கொழுந்துகள் கொண்டு செல்லப்படுகின்ற போது கழிவு என்ற ரீதியில் நூற்றுக்கணக்கான கிலோ தேயிலைக்கொழுந்துகள் கழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக மேற்படி தோட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகளில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கிலோ என்ற ரீதியில் தேயிலைத்தொழிற்சாலைகளில் அரைப்பதற்கு மறுக்கப்பட்டதாகக் கூறி அந்தத்தேயிலைக்கொழுந்துகளை தோட்டங்களில் கொட்டும் நடவடிக்கைகள் தொடர்வதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக தோட்ட நிருவாகம் தமக்குரிய மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மறுப்புத்தெரிவித்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் தமது மேலதிக வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்காக நாளொன்று 35 கிலோ தொடக்கம் 40 கிலோ வரை பறிப்பதாகவும் இவ்வாறு மேலதிகமாக பறிக்கப்படுகின்ற போது நாளொன்றுக்கான சம்பளத்துக்குரய 18 கிலோ கொழுந்தைத்தவிர மேலதிகமாக பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு கிலோவுக்கும் 9 ருபாவை மேற்படி பிரச்சினைகள் காரணமாக தம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்று லெதண்டி தோட்டத்தைச்சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். பொகவந்தலாவை பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட லெதண்டி ,காபெக்ஸ் ,மால்புரோ ,புரோடக் ஆகிய தோட்டங்களில் இடம் பெறுகின்ற இந்த விடயம் தொடர்பாக இந்தக்கம்பனியின் உயரதிகாரிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலதோட்டங்களில் கொழுந்து இல்லாத காரணத்தினால் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்டக்கம்பனிகளுக்கும் வருமானமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது .இவ்வாறானதொரு நிலையில் மேற்படி தோட்டங்களில் பறிக்கப்படுகின்ற தேயிலைக்கொழுந்துகள் முறையற்ற நிருவாகத்தின் காரணமாக வீணடிக்கப்படுகின்றபடியால் தோட்டத்தொழிலாளர்களும் தோட்ட நிருவாகமும் தமக்குரிய லாபத்தினை இழக்க நேரிட்டுள்ளமையைத் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட கம்பனியின் உயர்மட்டத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாம் இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தினை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்கள் இருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.




வத்தளை கடலில் குளிக்கச்சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு
மாணவர்களைத் தேடும் நடவடிக்கைளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு
வருகின்றனர்.
இவ்வாறு கடலலையால் அள்ளுண்டு சென்றவர்கள் பொகவந்தலாவை சீனாக்கலை தோட்டத்தைச்சேர்ந்த
ஹொலிறோசரி பாடசாலையில் கல்விக்கற்கும் மாணவர்கள் இருவரென தெரிய வருகின்றது.
அந்தோனிராஜ் நிரோஷன்( வயது 17 ) ,ராமலிங்கம் சபேஸ்குமார் (வயது 17 ) ஆகிய இரண்டு
மாணவர்களே இவ்வாறு கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்களின் பெற்றோர் வத்தளை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் இந்த மாணவர்களைத்
தேடும் நடவடிக்கைள் தொடருகின்றன.
பொகவந்தலாவையிலிருந்து கடந்த 8 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்திலுள்ள உறவினர்
வீடொன்றுக்குச் சென்றிருந்த போது மேற்படி இரண்டு மாணவர்களும் அன்றைய தினம் மாலை கடலில்
குளித்துக்கொண்டிருந்த போது தீடிரென மேலெழுந்து வந்த கடலலையால் இந்த மாணவர்கள்
இழுத்துச்செல்லப்பட்டனர் என்று சபேஸ்குமாரின் தந்தை ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர்களைத்தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.