இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிருவாக சபைக்கூட்டம் இந்த முன்னணியின் நுவரெலியா பணிமனையில் இடம் பெற்ற போது முக்கிய தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்குத் தற்போது பகுதி பகுதியாக வழங்கப்படுகின்ற சம்பளத்தினை அடிப்படைச்சம்பளமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சுகாதார வைத்தியசேவையைக்கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கம் எம்பலன்ஸ் வாகனங்களை வழங்க வேண்டும். இந்திய அரசாங்கத்தினால் தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற வீடமைப்புத்திட்டங்கள் அரசியல் தொழிற்சங்க வேறுபாடின்றி தேவையானவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படவேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கட்சியிலிருந்து சுயமாக விலகிய பொதுச்செயலாளர் நிதிச்செயலாளர் மற்றும் உபதலைவர் ஆகியோர் கட்சியிலிருந்து விலக்குவதாகவும் நிருவாக சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சதாசிவம் மேலும் தெரிவித்தார்.