மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வியாழன், 14 ஜூலை, 2011
சாமிமலை பிரதேசத்தில் குளவிகள் கொட்டியதால் பெண்தொழிலாளி பரிதாப மரணம்.
சாமிமலை ஸடெஸ்பி தோட்டப்பிரிவுகளில் குளவிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சாமிமலை குமரி தோட்டத்தில் நேற்று 13 ஆம் திகதி கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளர்களைக் குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் பாதிப்புக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைச்செடிகளுக்கு அருகிலுள்ள குளவிக்கூடுகளை அப்புறப்படுத்துவதற்கு தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்காமையே இந்த நிலைமைக்குக் காரணமெனத் தோட்டத்தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஸ்டெஸ்பி தோட்ட வைத்தியசாலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேல் தோட்ட மருத்துவ உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் இந்தத்தோட்டப்பகுதிகளில் திடீர் விபத்துக்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சாமிமலை ஸடெஸ்பி தோட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஸ்டெஸ்பி தோட்டப்பகுதிகளில் உள்ள குளவிக்கூடுகளை அப்புறப்படுத்துவதற்கு தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்குத் தோட்ட நிருவாகம் உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டுமெனவும் குமரி தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)