செவ்வாய், 7 செப்டம்பர், 2010

வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக சேவையாற்றுவேன் : உதயகுமார் தெரிவிப்பு











நுவரெலியா
மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்குத் தொடர்ந்து நேர்மையாக சேவையாற்றுவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்..உதயகுமார் தெரிவித்தார்.
தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொட்டகலையிலுள்ள நுவரெலியா பிரதேச சபை தலைமைக்காரியாலய முன்றலில் பகிரங்காக காட்சிப்படுத்தியதன் பின்பு பயனாளிகளுக்கு வழங்கி வைத்துப்பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ,உபதலைவர் புண்ணியமூர்த்தி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன் ,நாகராஜ் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் முக்கியஸ்தர்களும் தோட்டக் கமிட்டித்தலைவர்களும் தோட்டத்தலைவர்களும் கலந்து கொண்டனர்..பத்தனை பொரஸ்கிரீக் , குயின்ஸ்பெரி வெஸ்ட் ,நானுஓயா டெஸ்போர்ட் லோன் டிவிசன் ,கிளாஸ்கோ மேற்பிரிவு ,தம்பத்தலாவ , தலவாக்கலை மட்டக்கெல ,கிரேட்வெஸ்டன் லுசா ,கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு ,எதன்சைட் மேற்பிரிவு ,லிந்துலை தங்ககெல ,சலாங்கந்த ,நுவரெலியா வெஸ்டோடா ,கந்தப்பளை டிவிசன் ஆகிய தோட்டங்களின் வாழுகின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயனாளிகள் பெற்றுக்கொண்டனர்.
எம்.உதயகுமார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகள் முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டினை அண்மைக்காலமாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணசபையில் எனக்கு ஒதுக்கப்படுகின்ற 25 இலட்சம் ரூபா நிதி முழுமையாக மக்களின் அபிவிருத்தித்திட்டங்களுக்குப்பயன் படுத்த வேண்டும்.இவ்வாறான நிதியொதுக்கீடுகள் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.மத்திய மாகாணத்தில் எமக்கு ஒதுக்குகின்ற நிதியானது சிறிய அளவாக இருந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு அதனை நேர்மையாக பயன்டுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் ,பிரதேச செயலகங்கள் ஊடாக பலவேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
இந்த வேலைத்திட்டங்கள் அந்தந்த நிறுவனங்கள் ஊடாக உரியர்களுக்கு ஒப்படைக்கப்படும்.அதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளுக்கு நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான பொருட்களே இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. என்னைப்பொறுத்த வரையில் நான் மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் மாத்திரம் மக்களுக்குச்சேவை செய்வதில்லை.எனது சொந்த நிதியின் மூலமாகவும் மக்களுக்குச் சேவை செய்து வருகின்றேன். அத்துடன்; நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை .அரசியல் தொழிற்சங்க பேதமின்றி மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக எமது தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்துடன் தோள் கொடுத்து சேவையாற்ற வந்துள்ளேன்., நாம் மலையகத்தின் கல்வி ,விளையாட்டு ,சுகாதாரம் ,சுயத்தொழில் போன்றனவற்றுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவோம். இதே வேளை நான் மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் பல அபிவிருத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் சிலவற்றை மத்திய மாகாணசுகாதார அமைச்சு ஏற்க வேண்டுமென நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவ்விடயம் குறித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன் மத்திய மாகாணசபையில் எனது கோரிக்கைக்கேற்ப தோட்டப்பகுதிகளுக்கான மின்சார இணைப்புக்காக 25 இலட்சமும் குடிநீர் விநியோகத்திற்காக 8 இலட்சமும் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் நான் சுட்டிக்காட்டிய சில பாதைகளைச்செப்பனிடுவதற்கும் மத்திய மாகாணசபையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தப்பொதுத்தேர்தலில் எனக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் அளித்த போதும் எனது வெற்றி மயிரிழையில் இல்லாமல் போய் விட்டது.எனினும் எனது மாகாணசபை பதவியின் மூலம் வாக்களித்த மக்களுக்கு நான் நேர்மையாக சேவை செய்வேன்.

பொகவந்தலாவை சென்மேரிஸ் நிருவாகத்திற்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டம்

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களும் மாணவர்களும் பெற்றோரின் ஒரு பகுதியினரும் இன்று 7 ஆம் திகதி கவனீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்தக்கல்லூரியின் நிருவாக சீர்கேடுகளையும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் வீழ்ச்சியையும் ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டியே இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஈடுபட்டனர். இதே வேளை இந்தக்கல்லூரியின் மாணவர்கள் நேற்று வகுப்பறைக்குச்செல்லாது மைதானத்தில் கூடியிருந்தனர். இந்த நிலையில் பழைய மாணவர்கள் கல்லூரியில் காணப்படுகின்ற சீர்கேடுகள் தொடர்பாக
சுட்டிக்காட்டி கல்லூரியின் அதிபருடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு
வகுப்பறைகளுக்குச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச்சம்பவத்தைக்கேள்வியுற்ற பொகவந்தலாவைப் பொலிஸார் கல்லூரியின் வளாகப்பகுதியில் விசேட பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்தச்சம்பவம் தொடர்பில் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு இந்தச்சம்பவம் தொட்ரபாக ஆராய்வதற்காக கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை இந்தக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொகவந்தலாவை நகர வர்த்தகர்கள் சிலர் கதவடைப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

18 ஆம் அரசியல் சீர்த்திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கவுள்ள 18 ஆம் அரசியல் சீர்த்திருத்தச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபை நடவடிக்கைகளிலிருந்து வெளி நடப்பு செய்ததாக ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.