நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அதிக அக்கறையுடன் செயற்படவேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்ட முக்கியஸ்தர்களுக்காக நேற்று 16 அம் திகதி அட்டனில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களான மனோகரன் ,நாகராஜ் ,அந்தோனிராஜ்,சிவகுமார் ,சிவானந்தன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள் ,மாவட்டத்தலைவர்கள் ,தோட்டக்கமிட்டித்தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதன் போது தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம்; கூறியதாவது :
இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் தன்னை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வது ஜனநாய ரீதியான உரிமையாகும் .இந்த உரிமையை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி மக்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதைத் தடுப்பதற்குப் பல்வேறு சதிகள் இடம் பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தமிழ் மக்களை வாக்காளர்களாக பதிவு செய்கின்ற கிராம உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பெருந்தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு என்பது தனியே தேர்தலில் வாக்களிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதொன்றல்ல. உரிய வகையில் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போது அதன் மூலம் நாம் தனிப்பட்ட வகையிலும் சமூக .அரசியல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளைப்பெற்றுக்கொள்ள முடியும்..வாக்காளர் இடாப்புக்கள் மீளாய்வு செய்கின்ற போது கிராமப்பகுதிகளிலும் நகரப்பகுதிகளிலும் அமுல் படுத்தப்படுகின்ற சில நடை முறைகள் தோட்டப்பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழந்து வருகின்றனர்.ஆகவே இந்த நிலையைத் தொடரவிடக்ககூடாது.எனவே எமது தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்தி தோட்டப்பகுதி மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் அவர்களுக்கு வழிகாட்டியாக செயற்படவேண்டும்.இதே வேளை நுவரெலியா மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றில் குரலெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக