பெருந்தோட்டப்பகுதி சிறுவர்களின் நலனோம்பு விடயங்களில் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற சிறுவர்கள் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழந்து வருகின்றனர்.குறிப்பாக தோட்டப்பகுதி சிறுவர்களுக்கு முன்பள்ளிக்கல்வி இதுவரை முறையாக வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தைப்பொறுத்த வரையில் பிரிடோ போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் தோட்டப்பகுதிகளில் முன்பள்ளிகளை ஏற்படுத்துவதில் முனைப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் தோட்டப்பகுதிகளில் முறையாக முன்பள்ளிகளை அமைத்துக்கொடுப்பதில் தோட்ட நிருவாகங்களோ அரசாங்கமோ உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் மத்தியில் போஷாக்கின்மை 36.2 வீதமாக காணப்படுவதாக அறிவித்துள்ளது.இவ்வாறு போஷாக்குக்குறைபாடுடைய பிள்ளைகள் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகமாகவுள்ளனர். இவ்வாறு பிள்ளைகள் போஷாக்குறைப்பாடுடன் வாழுவதால் அவர்களின் பல்வேறு ஆளுமை வளர்ச்சிகள் பாதிப்படைகின்றன.அத்தோடு ஏனைய சிறுவர்கள் அனுபவி;க்கக்ககூடிய உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் வருமான தாழ் நிலைமை சிறுவர்களின் வாழக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்டச்சிறுவர்களின் நலனோம்புத்திட்டங்கள் குறித்து அரசாங்கமும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களும் அக்கறையின்றி செயற்படுகின்றமைக் கவலைத்தரக்கூடிய விடயமாகும். இதே வேளை தோட்டப்பகுதிகளில் சிறுவர்களின் உரிமைகள் அவர்களின் தேவைகள்; என்பன தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படாததால் பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் இதனால் அவர்களில் பல்வேறு உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.. பெருந்தோட்டப்பகுதி சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள் காட்டும் அக்கறை சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரச நிறுவனங்கள் அக்கறை செலுத்தாமலிருப்பது கவலைத்தரக்கூடிய விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணசபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக