கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு மற்றும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய ,சமூக அபிவிருத்தி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள பிரிடோ சிறுவர் கழக ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக இந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
கடந்த மாதங்களில் புஸ்ஸல்லாவை புரொட்டொப், காச்சாமலை ஆகிய தோட்டங்களில் கர்ப்பணித்தாய்மார்கள் லொறிகளில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது லொறிகளில் பிரசவம் நேரிட்டதால் சிசுக்கள் மரணமடைந்த விடயம் பெரிதும் பேசப்பட்டது. இந்த சம்பவங்கள் கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்திற்கான உரிமையை மட்டுமின்றி சிறுவர் உரிமைகளையும் பாரதூரமாக பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி கர்ப்பிணித்தாய்மாரை லொறிகளில் கொண்டுசெல்லும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியிருந்தது. இது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு தமது அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அறிவித்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு சிறுவர் கழகத்திற்கு அறிவித்திருந்ததுடன் கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் சிறுவர் கழக ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பதிலில் கர்ப்பிணித்தாய்மார்களை லொறிகளில் ஏற்றிசெல்வதற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்துள்ள சிறுவர் ஒன்றியம் இவ்விடயத்தை முன்னெடுத்து சென்று தீர்க்கமான முடிவொன்றினை பெற்றுத்தருமாறு அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளதுடன் இவ்விடயத்திற்கு முடிவு காணப்படும்வரை இவ்விடயத்தை முன்னெடுத்து செல்வதென தீர்மானித்துள்ளது. இதேவேளையில் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திற்கு, கடிதம் கிடைத்ததாக கூட எவரிடமிருந்தும் பதில் வரவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டும் மாவட்ட சிறுவர் கழக ஒன்றியம் சமூக பிரச்சினைகளில் சிறுவர்கள் அக்கறை காட்டும்போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது தலைவர்களின் கடமையாகும் என்பதை எடுத்துக்கூற விரும்புகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக