புதன், 23 ஜூன், 2010

அட்டன் தொழிற்திணைக்களத்தின் முன்னால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப்போராட்டம்










மஸ்கெலியா அப்புகஸ்தென்னத்தோட்ட நிருவாகத்தின் பல்வேறு கெடுபிடிகளைக்கண்டித்து இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் தொழிற்திணைக்களத்தின் அட்டன் பணிமனைக்கு முன்னால் இன்று மாலை கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அப்புகஸ்தென்னத்தோட்ட நிருவாகம்; ஒருநாட்சம்பளத்திற்காக 19 கிலோ கொழுந்தினைப்பறிக்குமாறு கோரிவருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டன் நகருக்கு இன்று வருகைத்தந்த தொழிலாளர்கள் தொழிற்திணைக்கள பணிமனைக்கு முன்னால் இன்று மாலை 2 மணிமுதல் 4 மணிவரை சுலோகங்களை ஏந்தியவண்ணம் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அட்டன் பொலிஸார் பாதுகாப்பிலும் ஈடுபட்டனர்.
மேற்படி தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஒருநாட்சம்பளத்திற்காக நாளொன்றுக்கு 16 கிலோ தேயிலைகொழுந்தினை மாத்திரமே பறிப்போம் என்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் மே மாதம் 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 9 ஆம் திகதி வரை பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்தப்போராட்டம் தொடர்பாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் முயற்சியினால் அட்டன் தொழிற்திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.இதனைத்தொடர்ந்து இம் மாதம் 9 ஆம் திகதி அட்டன் தொழிற்திணைக்களத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றது.இந்தப்பேச்சுவார்த்தையின் போது இந்தப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கும் மேலுமொரு பேச்சுவார்த்தை இம் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.இவ்வாறானதொரு நிலையில் இன்று இடம் பெற்ற பேச்சுவார்த்தைக்குத்தொழிலாளர் பிரதிநிதகள் வருகைத்தந்திருந்த போதும் அப்புகஸ்தென்ன தோட்ட நிருவாகத்தின் சார்பாக எந்தவொரு பிரதிநிதியும் வருகைத்தரவில்லை என்பது குறிhப்பிடத்தக்கது.
இதேவேளை தொழிலாளர்களின் இந்தப்போராட்டம் தொடர்பாக அட்டன் தொழிற்திணைக்களத்தின் பிரதித்தொழில் ஆணையாளர் எஸ்.சந்திரதிலக்கவுடன்
ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்லைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்றைய பேச்சுவார்த்தைக்குத் தோட்ட நிருவாகத்தின் சார்பாக பிரதிநிதிகள் வருகைத்தராத காரணத்தினால் மீண்டுமொரு பேச்சுவார்த்தை ஒன்று ஜுலை மாதம் 16 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: