திங்கள், 14 ஜூன், 2010

சாமிமலைப்பிரதேசத்தில் மாணிக்கம் அகழ்வதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சாமிமலை பிரதேசத்திலிருந்து உற்பத்தியாகும் மஸ்கெலியா ஓயாவில் மாணிக்கம் அகழ்வது தொடர்பில் நிபந்தனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. சாமிமலை கவிரவில கிறின்பார்ம் கிராம மக்களின் நலன் கருதி அருகில் உள்ள ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்த போது அப்பிரதேசத்தில் மாணிக்கக்கற் படிமங்கள் இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்பு இந்தப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆற்றோரத்தில் மாணிக்கம் அகழும் பொறுப்பினை இரத்தினக்கல் மற்;றும் ஆபரணங்கள் அதிகாரசபைப் பெறுப்பேற்றது. இவ்வாறானதொரு நிலையில் இந்தப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்,இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் ,நுவரெலியா அரசாங்க அதிபர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ ஆகியோர் மாணிக்கக்கற் படிமங்கள் உள்ள இடத்தினைப் பார்வையிட்டனர். அத்துடன் ஆற்றுவெள்ளத்தினால் அடிக்கடி இடம் பெயர்ந்து பாதிப்படைகின்ற கிறின்லைன்பார்ம் குடியிருப்பாளர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே மாணிக்கம் அகழும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இந்தப்பிரதேசத்தில் மாணிக்கம் அகழுவதற்கான ஏலவிற்பனை இடம் பெறக்கூடாது ,இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை மாத்திரம் மாணிக்கம் அகழும் நடவடிக்கையைப் பொறுப்பேற்க வேண்டும்.ஆற்று வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகின்ற கிறின்பார்ம் குடியிருப்பாளர்கள் 52 பேருக்கு நோர்வூட் - மஸ்கெலியா பிரதான பாதையோரத்தில் இனங்காணப்பட்ட இடமொன்றில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்ற பொறுப்பினை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை ஏற்க வேண்டும்.இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே மாணிக்கம் அகழும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமென்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டான் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றும் விரைவில் இடம் பெறவுள்ளன.
தகவல் : நோர்வூட் ரஞ்சித்ராஜபக்ஷ

கருத்துகள் இல்லை: