வெள்ளி, 23 ஜூலை, 2010

புசல்லாவைப்பிரதேசத்தில் மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கின்றன : பிரதேச மக்கள் மனக்கிலேசத்துக்கு உள்ளாகியுள்ளனர்.





மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது.இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் நிலைமை மலையகத்தில் ஏற்பட்டுள்ளது.பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக்காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டுக்கொண்டும் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச்சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாமம் கூறி சமூகத்தின் பார்வையைத்திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது. ஆனால் நாம் மறுபக்கம் இந்தச்சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மாணவிகளின் குடும்பச்சூழலும் சமூகச்சூழலும் இந்த மாணவிகளின் தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
அண்மையில் வெளியாகிய க.பொ.த .சாதாரணதரப்பரீட்சையில் திருப்தியான பெறுபேறு வராத காரணத்தினால் விரக்தியடைந்த புசல்லாவைப்பிரதேச மாணவி சஹானா தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டமையானது பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .இதன் போது அனைத்துத்தரப்பினரும் இந்த மாணவியின் தற்கொலைக்கு பாடசாலைதான் காரணம் என்று விரல் நீண்டத்தொடங்கியது. ஆனால் இந்த தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் கடந்த 15 ஆம் திகதி இதே பாடசாலையசை;சேர்ந்த மாணவி டில்ருக்ஷி; கடந்த மூன்று மாதகாலமாக பாடசாலைக்கு வருகைத்தராமல் திடீரென கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.பாடசாலைக்கு நீண்டகாலம் வருகைத்தராதது குறித்துப்பாடசாலை நிருவாகம் குறிப்பிட்ட மாணவியிடமும் பெற்றோரிடமும் விளக்கம் கேட்டுள்ளது. பாடசாலைக்கு நீண்டகாலம் மாணவர்கள் வருகைத்தரா விட்டால் அந்த மாணவர்களுக்குரிய கணிப்பீட்டு விடயங்களை மேற்கொள்வது ஆசிரியர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படும். தற்போது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் குறித்து கல்வியமைச்சு பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறானதொரு நிலையில் நீண்டகாலம் பாடசாலைக்கு வருகைத்தராத மாணவர்களிடம் விளக்கம் கோருவதற்கு பாடசாலை நிருவாகத்திற்குப் பொறுப்பு உள்ளதென்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் நீண்டகாலம் பாடசாலைக்குச் சமுகம் தராத மாணவியிடம் விளக்கம் கேட்டமையை எவ்விதத்திலும் குற்றமென்று கூற முடியாது.
எனினும் பாடசாலை நிருவாகத்தினால் இந்த விளக்கம் கேட்ட முறை குறிப்பிட்ட மாணவியின் மனநிலையையும் குடும்ப பின்னணியையும் அறிந்து கொண்ட விதத்தில் அமைந்துள்ளதா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இந்த நிலையில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு வெளியாட்டுக்குப்பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தாயின் வீட்டுப்பொறுப்புக்கள் இந்த மாணவியின் மீது சுமத்தப்பட்டிருக்கலாம்.இதனால் இந்த மாணவிக்குப்பாடசாலைக்கு வர முடியாத சூழு;நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வாறான நிலைமைகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்குப்பாடசாலை தான் காரணம் என்று கூறி குறிப்பிட்ட மாணவியின் தோட்டத்தைச்சேர்ந்த மக்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டம் நடத்துவதற்கும் முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதே பிரதேசத்தில் பாடசாலைக்குச்சென்று படிக்க வேண்டும் என்ற அடம் பிடித்த பிள்ளைக்குத் தாய் மறுப்புத்தெரிவித்ததால் விரக்தி அடைந்த அந்த மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முற்பட்ட போதும் அவர் காப்பாற்றபட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடரக்கூடாதென்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த போது புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. புசல்லாவை பிளக்பொரஸ்ட் தோட்டத்தைச்சேர்ந்த 21 வயதுடைய பிரெம்ஐயா சாந்தி என்ற இளம் யுவதியே இவ்வாறு தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புசல்லாவை பிரதேச பாடசாலை ஒன்றின் பழைய மாணவியான இவர் எதிர்வரும் உயர்தரப்பரீட்சைக்குப் பிரத்தியேகமாக தோற்றவுள்ள நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் குறிப்பிட்ட யுவதியின் சகோதரியின் மகன் வீட்டுக்குச்சென்ற போது வீட்டின் கதவு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.பிறகு அந்தக்கதவை திறந்து கொண்டு வீட்டினுள் சென்ற போது அந்த யுவதி; சேலை ஒன்றினால் கழுத்தில் சுறுக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது இந்த யுவதியின் சடலத்தனை புசல்லாவை வகுக்கப்பிட்டிய வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை .இவ்வாறானதொரு நிலையில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஏதுவான காரணிகள் என்ன என்பதை மலையக சமூக ஆர்வலர்கள் கண்டறிய வேண்டும். அத்துடன் மாணவர்களின் ஒழுக்க விழும்பியங்களிலும் பொறுப்புணர்வுகளிம் அதிக அக்கறை செலுத்துகின்ற நிலைமை பாடசாலைக்கு மாத்திரம் பொறுப்பல்ல அவர்களின் பெற்றோர்களுக்கும் பங்குண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும்

கருத்துகள் இல்லை: