சனி, 24 ஜூலை, 2010

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றுவது தொடர்பான அமெரிக்கப்பல்கலைக்கழக மாணவனின் ஆய்வு அறிக்கை








பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும்; பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக்கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வொன்று நேற்று 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெற்றது. மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தச்செயலமர்விற்கு மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி.அனுஷியா சிவராஜா இந்த அமைச்சின் செயலாளர் திருமதி ஷிராணி வீரக்கோன் ,அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசியர் சமரசிங்ஹ ,மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ ,ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தவரான அமெரிக்கா டுலேன் பல்கலைக்கழகத்தின் மாணவன் மைக்கல் போல் அட்டன் சீடா தகவல் தொழினுட்ப நிலையத்தின் பொறுப்பாளர் எம்.விஜயானந்தன்ஆகியோரும் மத்திய மாகாணத்தைச்சேர்ந்த தமிழ்ப்பிரிவின் கல்வி அதிகாரிகள் ,தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ,பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறைசார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட முக்கியமான சில விடயங்கள்
1. பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற மக்களின் வாழ்வியல் சூழ்நிலை ,உட்கட்டமைப்பு
உட்கட்டமைப்புக்குறைப்பாடுகள் , பொருளாதார தாழ்நிலைமை ,வறுமை ,போஷாக்குக்குறைப்பாடு ,பெரும்பாலான தேவைகளுக்கு தோட்ட நிருவாகங்களை நம்பியிருத்தல் ,சமூக மூடபழக்கவழக்கங்கள் போன்ற காரணிகள் பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வியையும் பாதிக்கின்றது.
2. பெருந்தோட்டப்பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவுக்கும் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவுக்குமிடையிலான இடைநிலைப்பிரிவில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்தல் ,இந்தப்பிரிவிலுள்ள வகுப்புக்களின் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள்
ஓரிலக்கை நோக்கி முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் அதிகமாயிருத்தல்.
3. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளிலிருந்து இடை விலகுகின்ற மாணவர்கள் வேலையுலகிற்கு தேர்ச்சியற்ற நிலையில் பல்வேறு தொழிலுக்குச்செல்வதால் மனரீதியான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
4. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் பெரும்பாலானவை சமூகத்தொடர்பாடல் குறைந்த நிலையிலிருப்பதால் இந்தப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி குறைவாகயிருப்பதையும் சமூகத்தொடர்பால் அதிகமாக காணப்படுகின்ற பாடசாலைகளில் கல்வி அடைவு மட்டம் உயர்வாக காணப்படுகின்றமை .பொதுவாக பாடசாலை அபிவிருத்திச்சபைகள் ,பழைய மாணவர்சங்கங்கள் என்பன பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளைப்பொறுத்த வரையில் கூடிக்கலைகின்ற அமைப்புக்களாக காணப்படுகின்றன.
5. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் ஐந்து மாணவர்கள் எழுதுகின்ற பரீட்சைக்குக்காட்டுகின்ற அக்கறை இடைநிலை மாணவர்களிடத்திலும் சாதாரணதரப்பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களிடத்திலும் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடத்திலும் பெற்றோர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அதிக அக்கறை காணப்படாமை.
6. பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் 87 வீதமானவை ஆரம்ப ,இடைநிலை வகுப்புக்களைக்கொண்ட பாடசாலைகளாக இருக்கின்ற போது 13 வீதமான பாடசாலைகளே உயர்தர வகுப்புக்களைக்கொண்டுள்ளன.இதனால் பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமை வெளிப்படையாகும். சாதாரணதரப்பரீட்சையில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரக்கல்வியைத் தொடருகின்ற போதே பல்கலைக்கழகங்களுக்குச்செல்லும் பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் தொகையை அதிகரிக்க முடியும் .தற்போது பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்றவர்களின் 5 வீதமானவர்களே பல்கலைக்கழகங்களுக்குச்செல்கின்றனர். அதாவது 100 பேர் பரீட்சைக்குத்தோற்றினால் 5 பேர் தான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதியை 10 தொடக்கம் 12 வீதமானவர்கள் பெறுகின்றனர். எனவே உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது பல்கலைக்கழகங்களுக்குச்செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படும்
இந்த ஆய்வறிக்கையின் மூலம் மலையகத்தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப்பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது. பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக்கல்வியை மேப்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன. இந்த முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு செயற்றிட்டமொன்றினை தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம் ,மலையக அரசியல் தலைமைகள் ,அரசசார்பற்ற நிறுவனங்கள் ,வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: