சனி, 28 ஆகஸ்ட், 2010

பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மின் உற்பத்தித்திட்டத்திற்கு தோட்டத்தொழிலாளர்கள் எதிர்ப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவர் அதே தோட்டத்தைச்சேர்ந்த மாணவி ஒருவரைக் கடத்த முற்பட்ட சம்பவத்தைத் தட்டிக்கேட்டவர்களின் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மின் உற்பத்தித்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 28 ஆம் திகதி கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த நபரொருவரை ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் நோர்வூட் பொலிஸாருடன் தொரடர்பு கொண்டதன் பின்பு குறிப்பிட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தலைவர் விசுவநாதன் தெரிவித்தார். இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக்கொண்டு வரப்பட்டதாகவும் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய மின் உற்பத்தித்திட்டத்தினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டான்; பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட உள்ளதாகவும் இ.தொ.கா.வின் முக்கியஸ்தரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஜுலை 12 ஆம் திகதி இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமி ஒருவர் கேர்க்கல்ஸ்வோல்ட் கீழ்ப்பிரி தோட்டத்திலிருந்து பிரதான பாதையின் ஊடாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது பொகவந்தலாவை நகரப்பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கேர்க்கஸ்வோல்ட் தோட்ட மின்உற்பத்தி நிலையத்தில் பணிபுரிகின்ற பலாங்கொடை பிரதேசத்தைச்சேர்ந்த நபரொருவர் அந்த மாணவியின் கையைப்பிடித்து இழுத்துள்ளார்.இதன் போது அந்த மாணவி கூக்குரலிட்டுள்ளார் இதனைச் செவிமடுத்த அயலவர்கள் துரிதமாக செயற்பட்டு குறிப்பிட்ட நபரைப் பிடித்துக்கொண்டு நையப்புடைத்துள்ளனர். இந்தச்சம்பவத்தைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் பெருந்திரளாக திரண்டதோடு தொழிலுக்குச்செல்லவும் மறுப்புத்தெரிவித்தனர்.. இதன் பின்பு இவ்விடயம் தொடர்பாக தோட்ட நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் பொலிஸார் நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்பு சந்தேக நபரை கைது செய்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட நபரைத் தாக்கிய தோட்ட மக்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நோர்வூட் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகைய நடவடிக்கைகளின் ஒன்றாகவே இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: