வியாழன், 16 செப்டம்பர், 2010

நவசக்தி செயற்றிட்டத்தின் ஊடாக மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுயத்தொழில் கடனுதவி

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நவசக்தி செயல்திட்டத்தினூடாக சுயத்தொழில்களை ஊக்குவிக்குமுகமாக பல்வேறு துறைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக பிரஜாசக்தி செயற்திட்ட முகாமையாளர் ஜி. நகுலேந்திரன் தெரிவித்தார்.
இந்தக்கடனுதவித் திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் நவசக்தி சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவிகளை நாம் இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கு முன்னதாக, பிரஜாசக்தி நிலையங்களுக்கு உட்பட்ட பெருந்தோட்ட பிரதேசங்களிலிருந்து இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான செயலமர்வுகள் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்; ஆலோசகரால் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் முதல் கட்ட நிகழ்வாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 75 இளைஞர் யுவதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக பதுளை, மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 68 இளைஞர் யுவதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 72 இளைஞர் யுவதிகளுக்கும், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் மக்கள் வங்கியினூடாக சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவி வழங்கப்பட்டது. நான்காம் கட்டமாக நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளுக்கு செயலமர்வு நடாத்தப்பட்டு சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இக் கடன் உதவியானது சிறுகைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்றது. அவர்களின் சுயத்தொழில் கோரிக்கைகளுக்கு அமைவாகவே அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இச் சுயத்தொழில் ஊக்குவிப்பு கடன் உதவியானது கடன் பெறுநரின் சொத்து அடமானமற்ற குறைந்த வட்டியிலான கடனுதவியாகவே வழங்கப்படுகின்றது. மீளச்செலுத்தும் கடன் தொகையானது மூன்று மாதங்களின் பின்னரே அறவிடப்படுகின்றது. ஐந்தாம் கட்டமாக கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் பாற் கிராமங்களை அமைக்கும் நோக்கத்துடன் அமைச்சுடன் இணைந்து நவசக்தி செயல்திட்டமும் செயற்பட்டுவருகின்றது. மேலும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் பிரஜாசக்தி நிலையங்களுடாக பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக மேலும் கால்நடைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. கால்நடை வளர்ப்பினை சுயத்தொழிலாக தெரிவுசெய்யும் இளைஞர் யுவதிகளுக்கு கண்டி மாபெரிதென்ன கால்நடை பயிற்சி நிலையத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. நவசக்தி செயல்திட்டத்தினூடாக கால்நடைகளை பெற்றுக்கொடுப்பதுடன், அமைச்சினூடாக கால்நடை வளர்ப்பு தொழுவங்களை அமைப்பதற்காக குறிப்பிட்டதொரு தொகையும் பெற்றுக்கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 200 இளைஞர் யுவதிகள்; தெரிவுசெய்யப்பட்டு கால்நடை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகளும், நவசக்தியினூடாக முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதில் 112 இளைஞர் யுவதிகள் சுயத்தொழில் கடனுதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டனர். இதன் முதன் நிகழ்வாக ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின்; 98வது ஜனனதின வைபவத்தினத்தன்று கொட்டகலை கலாசார மண்டபத்தில் 50 கால்நடைகள் சுயத்தொழில் ஊக்குவிப்பிற்காக வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: