மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 11 அக்டோபர், 2011
தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு : பி.திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு
இவ்வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில் பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் பார்க் தோட்டத்தில் மைதானப்புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா அமைப்பாளரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான அப்துல் அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் அம்மாசி நல்லுசாமி ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினருமான பி.சிவானந்தன் , தலவாக்கலை அமைப்பாளர் கிறே , கந்தப்பளை மாவட்டத்தலைவர் உதயசூரியன் , இணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே வேளை கந்தப்பளை யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் கந்தப்பளை தோட்ட மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கரப்பந்தாட்ட இறுதிச்சுற்றுப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்குவதற்கான அனுசரணையையும் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில் :
இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக எனக்கு ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ருபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சமூக மற்றும் பௌதிக செயற்றிட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்களைப் பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டதன் பின்பு வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த அடிப்படையில் பார்க் தோட்டத்திலுள்ள முஸ்லிம் பள்ளி வாசலுக்குச்செல்லும் பாதை வெகுவிரைவில் புனரமைக்கப்படவுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.. அத்துடன் கந்தப்பளை தோட்ட கரப்பந்தாட்ட மைதானத்தினையும் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக