தோட்ட முகாமையாளரை வெளியேற்றக்கோரி வெளிஓயா தோட்டப்பிரிவுகளைச்சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாக்கிரகப்போராட்டமொன்றில் இன்று 22 ஆம் திகதி ஈடுபட்டனர்.வெளிஓயா தோட்டத்தின் தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கோவில் முற்றத்திலும் தோட்ட அலுவலகத்துக்கு அருகிலும் பெண்தொழிலாளர்கள் உட்பட ஆண்தொழிலாளர்களும் ஏனையவர்களும் அமர்ந்திருந்து இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் காரணமாக தோட்ட அலுவலகத்தின் பணியாளர்கள் பீதி நிலைக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அட்டன் நகர் நோக்கி ஊர்வலமாக வரக்கூடும் எனக்கருதி அட்டன் பொலிஸார் அட்டன் - கனிகத்தேனை பிரதான பாதையில் செனன் சந்திக்கருகில் கூடியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தோட்டத்தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட அட்டன் வெளிஓயா தோட்ட முகாமையாளரை இடமாற்றக்கோரி இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த 1097 தொழிலாளர்கள் கடந்த 13 ஆம் திகதி முதல் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்டன் வெளிஓயா தோட்டத்தின் மேற்பிரிவு ,கீழ்ப்பிரிவு ,ஆக்ரஓயா ,புதுக்காடு ,தண்டுகலா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே பணிநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்வதற்காக தோட்ட நிருவாகம் இராணுவத்தையும் பொலிஸாரையும் வரவழைத்துத் தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட வெளிஓயா தோட்ட முகாமையாளரை இடமாற்றக்கோரி கடந்த 13 ஆம் திகதி முதல் சுமார் 1000 தொழிலாளர்கள் பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்போராட்டம்; தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையக தொழிலாளர் முன்னணி ,இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் இந்தத் தோட்டங்களுக்கு விஜயம் செய்து தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்து பேசியுள்ளனர். இந்த நிலையில் வெளிஓயா தோட்டத்தொழிலாளர்களின் இந்தப்போராட்டம் தொடர்பில் வட்டவளை பொதுமுனாமையாளர் ,அட்டன் தொழிற்திணைக்கள அதிகாரி ,தொழிற்சங்கங்கள் சார்பான பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளும் எவ்வித இணக்கப்பாடுமின்றி முறிவடைந்ததைத் தொடர்ந்து மேலுமொரு பேச்சுவார்த்தை இம் மாதம் 26 ஆம் திகதி இடம் பெறவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக